கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக ஜின்பிங் தேர்வு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,நவ.16 - சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக துணை அதிபர் ஜி ஜின்பிங் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனாவில் அதிகார மாற்றம் அமைதியான முறையில் நடைபெற்றது. உலகிலேயே பெரிய கட்சி சீன ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியாகும். இந்த கட்சியில் சுமார் 8 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கட்சியில் ஆட்சிமன்ற நிரந்தர குழு இருக்கிறது. இந்தியாவில் இடது கம்யூனிஸ்ட் கட்சியில் ஆட்சிமன்ற குழு இருப்பது போல் சீனா கம்யூனிஸ்ட் கட்சியிலும் உள்ளது. இந்த ஆட்சிமன்ற குழுவானது அதிகாரம் படைத்ததாகும். இதைத்தவிர கட்சியில் மத்திய கமிட்டி மற்றும் நிரந்தர கமிட்டி ஆகியவைகளும் உள்ளன. மத்திய கமிட்டியில் உள்ளவர்கள் ஆட்சிமன்ற குழுவுக்கும், கட்சியின் தலைமை பதவிக்கும் தேர்ந்தெடுப்பார்கள். நிரந்தர கமிட்டியில் உள்ளவர்கள் அதிகாரத்திலும் கட்சியில் உயர் பதவியில் உள்ளவர்களும் இருப்பார்கள். 

தற்போது அதிபராக இருக்கும் ஹூ ஜிண்டாவோ கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருப்பவர். அதேமாதிரி பிரதமராக இருக்கும் வென் ஜியாபாவோவும் 10 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார். சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகார மாற்றத்தை கட்சி மேற்கொள்ளும். அதேமாதிரி கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் பெய்ஜிங் நகரில் கடந்த ஒருவார காலமாக நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் துணை அதிபராக இருக்கும் ஜி, நேற்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜி, வரும் மார்ச் மாதம் அதிபர் பொறுப்பை ஏற்கிறார். அதேமாதிரி பிரதமர் வென் ஜியாபாவோவுக்கு பதிலாக லி கெகியாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சிமன்ற நிரந்தர கமிட்டிக்கு ஜாங் தெஜியாங், யு ஜெங்ஷெங்,லியு யுன்ஷன், ஜாங் கயோலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தேர்தல் நடக்கும்போது சீனா நாட்டு முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமினும் உடன் இருந்தார். மேடையில் இவர் மத்தியில் அமர்ந்திருந்தார். ஜியாங்கிற்கு 86 வயதானாலும் இவர் இன்னும் சீனாவின் கிங் மேக்கராக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை அன்று மத்திய கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜியாங்கின் ஆதரவாளர்கள்தான் என்று கூறப்படுகிறது. மத்திய கமிட்டிக்கு 205 நிரந்தர உறுப்பினர்களும் 171 மாற்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் நிரந்தர கமிட்டி மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களை தேர்வு செய்தனர். 

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜி பேசுகையில், சீனாவின் 130 கோடி பேர் பொருளாதாரம் உயர பாடுபடுவேன் என்றார். இதர நாடுகள் குறிப்பாக இந்திய விவகாரம் குறித்து எதுவும் அவர் பேசவில்லை. அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: