தி.மு.க. தலைமைக்கு காங்கிரஸ் நிர்ப்பந்தம்

ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011      அரசியல்

சென்னை, பிப்.21-ஆட்சியில் பங்கு - தங்கபாலு சூசக தகவல் - தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக இடங்கள் கேட்டும், ஆட்சியில் பங்கு கேட்டும் காங்கிரஸ் நிர்ப்பந்தம் செய்வதாகவும், இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பிறகு நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, ஆட்சியில் பங்கு குறித்தும் பேசியதாக சூசகமாக தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஈடுபட்டுவருகிறது.
தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிப்பது உறுதி எனக்கூறப்பட்டு வந்தாலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கலைஞர் டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியது. தி.மு.க.வை அச்சுறுத்தவே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி நேற்று பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்திய அடுத்த இரு தினங்களில் நேற்று தி.மு.க. - காங்கிரஸ் பேச்சுவார்த்தை அதே அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தி.மு.க. தரப்பில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டது.
அதே போல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே.வி.தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், மற்றும் ஜெயந்தி நடராஜன் எம்.பி., ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தைக்காக வந்த காங்கிரஸ் குழுவினரை, தி.மு.க.குழுவினர் வரவேற்றனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சியின் உறவு இணக்கமாக இருக்கிறது. வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினோம். அதே போல் அவர்களும் அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினர். இந்த பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து கட்சியின் மேலிட தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு, அடுத்த ஓரிரு நாட்களில் 2வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி, முழுமையான தகவல்கள் உங்களுக்கு அளிக்கப்படும் என்றார்.
அப்போது ஒரு நிருபர் ஆட்சியில் பங்கு கேட்கிறீர்களா? என்று கேட்டபோது, அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் அனைத்து விஷயங்களும் தெரிவிக்கப்படும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: