முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 ஆயிரம் பேருந்துகளை வாங்க ரூ.548 கோடி நிதி ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - எட்டு அரசு போக்குவரத்து தலைமையகங்களும், 285 பணிமனைகள் 20 கோட்டங்கள் கணினி வழி மூலம் இணைக்கவும் இந்த ஆண்டு 3  ஆயிரம் பேருந்துகளை வாங்க ரூ.548 கோடி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பயணிகளுக்கு விரைவாக பயணச்சீட்டுகளை வழங்க அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் 43,987 கையடக்கக் கருவிகளைக் கொள்முதல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களின் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரமும் உயர வேண்டுமானால், அனைத்து அடிப்படை வசதிகளோடு போக்குவரத்து வசதியும் சிறப்பாக அமைந்திடல் வேண்டும்.   பலவகை போக்குவரத்து வசதிகளில் சாலைப் போக்குவரத்து வசதி மிகவும் இன்றியமையாததாகும். மக்களை இணைக்கும் பாலமாக சாலைப் போக்குவரத்து செயல்படுகிறது.   சாலைப் போக்குவரத்து வசதி சிறப்பாக அமைந்தால் தான் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் போக்குவரத்து வசதி அளிப்பதற்காக தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  நகர், புறநகர், மலைப்பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் போக்குவரத்து சேவை அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

தமிழகத்திலுள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் 21,989 பேருந்துகளை இயக்கி வருகின்றன. நாளொன்றுக்கு 1.82 கோடி பயணிகள் இந்தப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.  சென்னைப் பெருநகரப் பகுதிகளில் மட்டும் நாளொன்றுக்கு 

47 லட்சத்திற்கும் மேல் பயணிகள் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.  எனவே, மக்களின் போக்குவரத்துத் தேவையை nullர்த்தி செய்வதற்கும், மக்களின் பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களுக்கு மாற்றாகவும், 3,000 புதிய பேருந்துகளை 434 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்குவதற்கும், மேலும் அடிச்சட்டம் மற்றும் எஞ்சின் நல்ல நிலையிலுள்ள 1,432 பேருந்துகளை 97 கோடியே 

58 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்பதற்கும் சென்ற ஆண்டு  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.  

இந்த ஆண்டு, 548 கோடி ரூபாய் செலவில் 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கும் தமிழக முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். இப்பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக கொள்முதல் செய்வதற்காக அரசு சார்பாக 150  கோடி ரூபாயை பங்கு மூலதன உதவியாகவும், 150 கோடி ரூபாயை கடனாகவும் வழங்குவதற்கு  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் துரிதமாக மக்களுக்கு சென்று அடைவதற்கு மின்ஆளுமை மற்றும் கணினிவழி சேவைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச் சீட்டுகள் வழங்கும் முறைக்கு  மாற்றாக, பயணிகள் எளிதாக பயணச் சீட்டினை பெறும் வகையில், புவி இருப்பிட முறைமை வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களை பயன்படுத்தி மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறையினை எல்லா பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச் சீட்டு வழங்கிட இயலும்,   நடத்துனரின் பணியும் எளிதாகும்.  இதுமட்டுமன்றி, ஒவ்வொரு பேருந்துகளிலும் வழங்கப்பட்ட பயணச் சீட்டுகள் பற்றிய விவரங்கள், பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியவரும். மேலும்,  பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, பயணிகள் மேற்கொள்ளும் பயணத்தின் தூரம், பேருந்துகள் உள்ள இடம் மற்றும் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகின்றனவா போன்ற விவரங்கள் அனைத்தும் போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் மற்றும் உயர் அலுவலர்களால் உடனடியாக அறியப்படும்.  

எனவே 8 போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த பேருந்துகளில் அதிநவீன கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச் சீட்டுகளை வழங்குவதற்கு வகை செய்யும் வகையில் 43,987 கையடக்க கருவிகளை கொள்முதல் செய்வதற்கும், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை 285 பணிமனைகள், 20 கோட்டங்கள், 

8 போக்குவரத்து தலைமையகங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தி அவற்றை சென்னையில் அமைய உள்ள மத்திய கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் இணைய தளத்தின் மூலம் இணைக்கும் வசதியை ஏற்படுத்துவதற்கும்,  தமிழக முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைகள், தமிழகத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்களின் பணிகள் மேம்பாடு அடைய வழிவகை செய்யும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்