முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிகவரித்துறை கோட்ட அலுவலர்களின் பணித்திறனாய்வு

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் தமிழக அரசின் நிதி நிலையினை உயர்த்திடும் முனைப்புடன், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் வேலூர் கோட்டங்களின் திறனாய்வினை தொடர்ந்து வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் அமைச்சர் பி.வி. ரமணா  சென்னையில் உள்ள வணிகவரி கோட்ட அலுவலர்களின் பணித்திறனாய்வினை 27/12/2012 அன்ற சென்னையில் மேற்கொண்டார்.  

சுனில் பாலிவால், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர், க. மணிவாசன், வணிகவரித்துறை ஆணையர் அவர்களுடன் துறையின் கூடுதல் ஆணையர்களும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.  சென்னை கோட்டத்தின் செயலாக்கம் மற்றும் நிர்வாக பிரிவுகளின் இணை ஆணையர், துணை ஆணையர்கள, உதவி ஆணையர்கள், வணிகவரி அலுவலர்கள் மற்றும் துணை வணிகவரி அலுவலர்கள் ஆகியோரும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தினைப் பொறுத்தமட்டில் நவம்பர் 2012 வரையிலான விற்பனை வரி வருவாய் ரூ.31127.01 கோடிகள் என்பதையும், அது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.25055.89 கோடிகளாக இருந்ததையும் சுட்டிக் காட்டிய அமைச்சர்  துறையின் வரி வருவாய் 24.23 விழுக்காடுகள் உயர்ந்துள்ளதெனத் தெரிவித்தார்.  சென்னையில் உள்ள ஐந்து வணிகவரி கோட்டங்களான சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), சென்னை (மையம்), சென்னை (கிழக்கு) மற்றும் பெருவணிகர்கள் வரி செலுத்தும் பிரிவு ஆகியவைகளைப் பொருத்தமட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 2011 வரை ரூ.19952.00 கோடிகளாக இருந்த வரி வருவாய் நடப்பாண்டில் நவம்பர் வரை ரூ.24176.00 கோடிகளாக உயர்ந்து 24 விழுக்காடுகள் வளர்ச்சி கண்டுள்ளதைப் பற்றி குறிப்பிட்ட அமைச்சர் துறையின் அலுவலர்கள் பெரும் முனைப்புடன் செயலாற்றினால் மட்டுமே துறைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2012-​13ம் ஆண்டிற்கான வருவாய் இலக்கினை முழுமையாக எய்த இயலும் என்பதனை வலியுறுத்தினார்.  மேலும், வணிகவரித்துறையின் மொத்த வருவாயில் 75 விழுக்காடுக்கு மேல் சென்னை கோட்டங்களிலிருந்து மட்டுமே வசூல் செய்யப்படுவதால், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலர்களும் சிறப்புடனும் அதிக சிரத்தையுடனும் செயல்பட வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அடுத்ததாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அலுவலக கட்டிடங்களை பராமரிக்கவும் சென்னை செயலாக்க கோட்டங்களுக்குட்பட்ட சோதனைச் சாவடிகள் மற்றும் தணிக்கை மையங்களை அமைத்திட நிலம் வாங்கவும் நவீனமயமாக்கல் பணிகளை கருத்திற் கொண்டும் தமிழக முதல்வர் ரூ.4.60 கோடிகளை சென்னை கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதனை அமைச்சர்  சுட்டிக் காட்டினார்.  இதன் விளைவாக திருத்தணி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவொற்றியூரில் உள்ள தணிக்கை சாவடிகளுக்கு இடம் வாங்குவதற்கும், கட்டிடங்களை அமைத்திடவும் ரூ.3.12 கோடிகள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் ரூபாய் 0.41 கோடிகள் செலவில் புழல் தணிக்கை சாவடியை மேம்படுத்தவும், ரூ.0.48 கோடிகள் செலவில் சென்னை சென்ட்ரல் ரயில்வே தணிக்கை மையம், ராயபுரம் சரக்கு மையம், எழும்ர் சரக்கு மையம் மற்றும் சூளையில் உள்ள ரயில்வே சால்ட் கோட்ரஸ் தணிக்கை மையங்களை மேம்படுத்திடவும் நவீனமயமாக்கிடவும் நிதி ஒதுக்கி உள்ளதையும் அமைச்சர் தெரிவித்தார்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க புதிய கட்டிடங்களை அமைக்கும் பொழுது அவைகளில் சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் உபகரணங்களை அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் அமைச்சர் தெரிவித்தார்.

இவையன்றியும் துணை வணிகவரி அலுவலர் பணிநிலையில் 117 இடங்களையும், உதவியாளர்கள் பணிநிலையில் 100 இடங்களையும் உடனடியாக நிரப்பிட முதல்வர் ஆணையிட்டுள்ளதனைப் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்ட நபர்களைக் கொண்டு இவற்றுள் சென்னையை பொறுத்தமட்டில் 27 துணை வணிகவரி அலுவலர்கள், 35 உதவியாளர்கள், 30 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 12 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டுள்ளதெனவும் பெருமையுடன் தெரிவித்தார்.

செயலாக்கப்புரிவு அலுவலர்கள் திறம்பட செயலாற்றினால் வரி ஏய்ப்பு பெருமளவில் குறைந்து வரி வருவாய் உயரும் என்பதைத் தெளிவுற எடுத்துரைத்த அமைச்சர்  சோதனைச்சாவடி அலுவலர்கள் மற்றும் சுழல் குழு அலுவலர்கள் வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் மற்றும் தமிழகத்திற்குள் கொணரப்படும் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி வரி ஏய்பபைத் தடுத்திட அறிவுரைகள் வழங்கினார்.  மேலும், அமைச்சர்  வரி ஏய்ப்புக்குட்பட்ட பொருட்களின் பரிமாற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.  மேலும், அதிக அளவில் வணிகர்கள் வரி செலுத்துதலை உறுதி செய்தலும், வரி நிலுவைகளை விரைந்து வசூலித்தலும் துறை அலுவலர்களது தலையாய பணி என்பதனையும் மேற்படி பணியினை குறிப்பிட்ட கால திட்டத்திற்குள் செயல்படுத்துதல் அவசியமென அமைச்சர் வலியுறுத்தினார்.

 ஆய்வுக்கூட்டத்தின் நிறைவாக அமைச்சர்  வணிகவரித்துறை அலுவலர்கள் தீவிரமான முனைப்புடனும் ஈடுபாட்டுடனும் பாடுபட்டால் மட்டுமே துறையின் முழுமையான செயல்பாட்டினை நிலைநிறுத்திடவும், தமக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை எய்திடவும் இயலும் என்றும் இதன் மூலமே அரசின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திட இயலும் என்பதனையும் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்