பாராளுமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்வேன் - அன்னா ஹசாரே

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      ஊழல்
Anna-Hazare 1

புதுடெல்லி, ஏப்.18 - லோக்பால் மசோதாவை நிராகரிப்பது என்று பாராளுமன்றம் முடிவெடுத்தால் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்வேன். காரணம் பாராளுமன்றம்தான் மேலானது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார். ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கு வகை செய்யும் லோக்பால் மசோதாவை கொண்டுவர வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, நாட்டின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தவர்தான் அன்னா ஹசாரே. அவரது போராட்டத்திற்கு வெற்றியும் கிடைத்தது. அதன் அடிப்படையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டு அந்தக் குழு தனது ஆய்வை நடத்தி வருகிறது. அநேகமாக அடுத்த  கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா கொண்டுவரப்பட்டால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் யாராக இருந்தாலும் அவரிடம் விசாரணை நடத்தலாம். அத்தகைய மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்ற ஆகஸ்ட் 15 வரை கெடு விதித்திருக்கிறார் அன்னா ஹசாரே. இந்த நிலையில் அவரிடம் லோக்பால் வரைவு மசோதாவை பாராளுமன்றம் நிராகரித்தால் உங்களது நிலை என்னவாக இருக்கும்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், பாராளுமன்றமே மேலானது. அதுவே அந்த மசோதாவை நிராகரித்தால் அந்த முடிவை நானும் ஏற்றுக்கொள்வேன். ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இருந்தாலும் ஜனநாயகத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த அரசு சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்று அன்னா ஹசாரே தனது கருத்தைத் தெரிவித்தார். தனது போராட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையில் மேற்கண்டவாறு அன்னா ஹசாரே தனது பதிலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: