மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் இன்று ஓட்டுப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      அரசியல்
west bengal map s 0

கொல்கத்தா,ஏப்.18 - மேற்கு வங்கத்தில் மொத்தம் 6 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் முதல் கட்டமாக 54 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடக்கிறது. இதில் 10 அமைச்சர்கள் உட்பட 364 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

டார்ஜிலிங் மலைப் பகுதியில் 3 தொகுதிகளும் இதில் அடங்கும். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, அருண்ஜெட்லி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். மேற்கு வங்கத்தில் நல்லாட்சி அமைய பா.ஜ.க.வுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இடதுசாரி கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஓட்டு சேகரித்தார். 

இந்த தேர்தலில் பா.ஜ.க,  இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ், திரிணாமுல் கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நடக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி சுனில் குப்தா, முதல் கட்ட தேர்தலுக்காக 12,133 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 364 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதட்டம் நிறைந்த பகுதிகளில் மத்திய படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார். 

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கூச் பெஹர், ஜல்பைகுரி, டார்ஜிலிங், வடக்கு தின்சாபூர், தெற்கு தின்சாபூர் மற்றும் மால்டா ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. 

தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. நக்சல் பிரச்சினை உள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அனைத்து பகுதிகளையும் மத்திய படை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் தடுக்க மாநில எல்லையும், சர்வதேச எல்லையும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்தல் மூலம் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. அவருக்கு ஆதரவாகவே கருத்துக் கணிப்புகளும் உள்ளன. இருந்தாலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள இடதுசாரிகளும் பாடுபட்டு வருகிறார்கள். இந்த அணி தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: