மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட தேர்தலில் விறு விறுப்பான ஓட்டுப்பதிவு

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011      இந்தியா
west bengal5

கொல்கத்தா, ஏப்.- 19 - மேற்கு வங்காளத்தில் நேற்று முதல் கட்டமாக நடந்த 54 தொகுதிகளுக்கான தேர்தலில் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். கடைசியாக கிடைத்த தகவலின்படி இந்த தேர்தலில் 69 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்காளத்தில் ஆறு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்த தேர்தலில் ஆளும் இடது  கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி கட்சிகள் ஓரணியாகவும், காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில்  தங்களது கூட்டணி வேட்பாளர்களை  ஆதரித்து  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மத்திய ரயில்வே துறை அமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரம்  செய்துள்ளனர்.
இந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட்டு நக்சலைட்டு  தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் வன்முறை  சம்பவங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய துணை ராணுவ படையைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட முக்கிய  பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் முதல் கட்டமாக 54 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.
மொத்தம் 6 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.
டார்ஜிலிங், தெற்கு தினாய்பூர் மாவட்டங்களில் காலை முதற்கொண்டே வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடிகளுக்கு திரண்டு வந்து ஓட்டளித்தனர்.
வடக்கு தினாய்பூர், ஜல்பய் குரி, கூச் பிஹார் மாவட்டங்களிலும் விறு விறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.
இந்த முதல்கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 97 லட்சத்து 62 ஆயிரத்து 159 ஆகும்.
இந்த தேர்தலில் மொத்தம் 364 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த மாநிலத்தை 34 ஆண்டு காலம் ஆட்சி செய்த இடது கம்யூனிஸ்டு  கூட்டணி  தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள  முயற்சி செய்து வருகிறது. இடது கம்யூனிஸ்டு ஆட்சியை  அகற்றி தனது புதிய ஆட்சியை அமைக்க திரிணமுல் காங்கிரஸ் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலுக்கு மொத்தம் 60,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்ததாகவும் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை என்றும்  மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இந்த மாநிலத்தில் இன்னும் 5 கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது.
இதை அடுத்து வருகிற மே மாதம் 13-ம் தேதி மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5  மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆரம்பத்தில் காலையில் முதல் 4 மணி நேரத்தில் மட்டும் 32 சதவீத வாக்குகள் பதிவானது. கடைசியாக கிடைத்த தகவலின்படி மேற்கு  வங்காளத்தில் நேற்று 69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: