லோக்பால் மசோதா வரம்புக்குள் நீதித்துறையும் வரவேண்டும்- திக்விஜய்சிங்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
singh

குணா, ம.பி., ஏப்.- 19  - லோக்பால் மசோதா என்ற வரம்பிற்குள்ளே அரசியல்வாதிகளை மட்டும் கொண்டுவரக் கூடாது. நீதித்துறை சம்பந்தப்பட்டவர்களையும் அந்த வரம்பிற்குள்ளே கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்க வேண்டும். அதன்பொருட்டு லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி சில தினங்களுக்கு முன் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது தெரிந்ததே. இதையடுத்து இந்த மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக 10 பேர் கொண்ட குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்து ஆய்வு செய்துவருகிறது. இதனிடையே இந்த மசோதா விவகாரத்தில் பாராளுமன்றம் எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஒருவேளை பாராளுமன்றம் அதை நிராகரித்தாலும் தாம் அதை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும், காரணம் பாராளுமன்றமே மேலானது என்றும் ஹசாரே கருத்து கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வந்திருப்பதாககூட கருதப்படுகிறது.  இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மத்திய பிரதேசத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழலை ஒழிக்க வகைசெய்யும் லோக்பால் மசோதா என்ற வரம்பிற்குள்ளே அரசியல்வாதிகளை மட்டும் கொண்டுவந்தால் போதாது.  நீதித்துறையும் இதில் கொண்டுவரப்பட வேண்டும். பிரதமராக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, அல்லது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தாலும் சரி அவர்களையும் இந்த மசோதா என்ற வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். அரசியல் சட்டப்படி அரசியல் சட்ட பதவிகளில் இருக்கும் அனைவரும் இந்த மசோதாவிற்குள் வரவேண்டும்.
இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: