சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்: நிதிஉதவி

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.- 4 - சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி அளித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம்,  சிறுகனூர் கிராமம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  1.2.2013 அன்று அருள்மிகு  சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு பாதையாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சித்தளி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி சுமதி மற்றும் முத்துசாமி என்பவரின் மகன் ராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும், விருதுநகர் மாவட்டம், இ.முத்துலிங்காபுரம் உட்கடை, கட்டனார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 31.1.2013 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரமூர்த்தி என்பவரின் மனைவி பேச்சியம்மாள், சிகிச்சை பலனின்றி 1.2.2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து  நான் மிகவும் துயரம் அடைந்தேன்.  சாலை விபத்தில் உயிரிழந்த சுமதி மற்றும் ராஜா, வெடி விபத்தில் உயிரிழந்த பேச்சியம்மாள் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா  ஒரு லட்சம் ரூபாய்   வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: