பழனிகோயில் தைப்பூசத் வருவாய் ரூ. 5 கோடியை தாண்டியது

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

பழனி, பிப்.- 5 - பழனி தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு  பல லட்சம் பக்தர்கள் பக்தர்கள் வருகை புரிந்தனர்.  இதன்மூலம் பழனித் திருக்கோயிலுக்கு பல்வேறு இனங்கள் மூலம் கிடைத்துள்ள வருவாய் ரூ.5 கோடியைத் தாண்டியுள்ளது. பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 30 ஆம் தேதி கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. 10 நாள் நடைபெற்ற விழாவின் போது சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர். விழாவின் போது பல்வேறு இனங்கள்  மூலமாக திருக்கோவிலுக்கு  சுமார் ஐந்து கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.  அதன் விவரம் வருமாறு : பஞ்சாமிர்தம் விற்பனை மூலமாக  ரூ.1 கோடியே 46 லட்சத்து 37 ஆயிரத்து  705 -ம், 20 ரூபாய், 200 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், கட்டளை பூஜை டிக்கெட்டுகள், காவடி மற்றும் அபிஷேக டிக்கெட்டுகள், அர்ச்சனை டிக்கெட்டுகள் விற்பனை மூலமாக  ரூ.2 கோடியே 47 லட்சத்து 85 ஆயிரத்து  150 -ம் வரப்பெற்றுள்ளது. இவை தவிர, முடிக் காணிக்கை சீட்டு விற்பனை, பல்வேறு  தங்கும் விடுதிகள் மூலம் வருவாய், விஞ்ச், ரோப் கார் டிக்கெட் விற்பனை, தங்க ரத  புறப்பாடு உள்ளிட்டவை அனைத்தும் சேர்த்து சுமார் ரூ.5 கோடி வருவாய்  கிடைத்துள்ளது.  இதுகுறித்து பழனி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்ததாவது:  பழனி கோவிலில் கடந்த ஆண்டு பசலியில் பல்வேறு இனங்கள் மூலம் வருவாய் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. ஜனவரி 2013 இல் மட்டும் கடந்த ஆண்டைக் காட்டிலும், சுமார் ரூ. 1 கோடியே 56 லட்சத்துக்கு கூடுதலாக பஞ்சாமிர்தம் விற்றுள்ளது. அதே போல, தைப்பூசத் திருவிழா 10 நாள்களில் கடந்த ஆண்டு பல்வேறு டிக்கெட் விற்பனையின் மூலம் ரூ. 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 750 கிடைத்தது. இந்த ஆண்டு ரூ. 42 லட்சத்து  19 ஆயிரத்து  400-க்கு அதிகமாக விற்பனை  நடைபெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.  நிகழ்ச்சியின் போது, பழனி கோயில் துணை ஆணையர்  ராஜமாணிக்கம், முதுநிலை கணக்கியல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: