முக்கிய செய்திகள்

லோக்பால் மசோதா வருவது எப்போது? பிரதமர் பதில்

Dr  Manmohan-Singh

 

புது டெல்லி,ஏப்.22 - ஊழலை ஒழித்துக்கட்ட வகை செய்யும் லோக்பால் மசோதா வரவிருக்கும் மழைக்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படும் என்றும் இவ்வாறு அரசு நம்புவதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும், அதற்கு வகை செய்யும் லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்று அது பற்றி ஆராய ஒரு குழுவையும் அமைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணா ஹசாரே, ஒருவேளை பாராளுமன்றம் லோக்பால் மசோதாவை நிராகரித்தால் அதை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்தார். காரணம், பாராளுமன்றமே மேலானது என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில் லோக்பால் மசோதா என்ற வரம்புக்குள் நீதித்துறையும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, 

ஊழல் விஷயத்தில் பொதுமக்களிடையே சகிப்பு தன்மை என்பது மிக குறைவாக உள்ளது. இருந்தாலும் இந்த சவாலை துணிச்சலாக சந்திக்க அரசு உறுதிபூண்டுள்ளது. லோக்பால் மசோதா பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது அறிமுகம் செய்யப்படும் என்று இந்த அரசு நம்புகிறது. ஊழலை ஒழித்துக்கட்டும் விஷயத்தில் நமது நாட்டு சட்டங்களும், நடைமுறைகளும் அவ்வளவு சக்திவாய்ந்ததாக இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. எனவே ஊழலை ஒழித்துக்கட்ட பாடுபடுவோம். ஊழலுக்கு எதிரான போரில் மக்களும் பங்காற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அவர்களிடம் தற்போது சகிப்பு தன்மை குறைவாக உள்ளது என்றே நினைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: