முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. சார்பில் 60 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.மார்ச்.1​ - தி.மு,க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவையொட்டி தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் 60 ஜோடிகளுக்கு இலவச திருமணம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி 60 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர், கட்சியில் எவ்வளவோ அணிகள் உள்ளன. அதில் சில அணிகள் பிணிகளாக மாறி விடுகிறது. ஆனால் அணியை பிணியாக்காமல் அணியாகவே வைத்திருக்கும் பொறுப்பை எனதருமைச் செல்வன் மு.க.ஸ்டாலின் வைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அந்த செல்வனுக்கு அந்த மணி விழா நாயகனை பாராட்டும் நேரத்தில் இயக்கத்தை கட்டுக்கோப்புடனும், கட்டுப்பாட்டோடும், அண்ணா கற்று தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை மனதில் கொண்டு இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். அதுதான் இந்த இயக்கத்தை மென்மேலும் வலுப்படுத்தும் என்பதை மனதில் தாங்கி இந்த நேரத்தில் சூளுரையாக ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய, இயக்கத்தின் மானத்தை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது என்பதை நினைத்தால்தான் எல்லா அணிகளும் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறினார்.

விழாவில் ஒவ்வொரு ஜோடிக்கும் பிரிட்ஜ், கிரைண்டர், பீரோ உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள 60 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் 10 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரங்கள், உள்பட ரூ.1 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

விழாவில் தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக முதல் கட்டமாக ரூ.2 கோடியை கருணாநிதியிடம் வழங்கினர். விழாவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், எஸ்.பி. சற்குணபாண்டியன், சுப.வீரபாண்டியன், வி.பி. துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்