முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகட்டான பகல் கனவு பட்ஜெட்: ஜெயலலிதா கண்டனம்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்.1 - நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் நிதி அமைச்சரின் பகல் கனவு. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும். சாதாரண மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- 

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக இல்லை. மிகவும் கண்டனத்திற்குரியதாக இன்றைய தினம் இந்திய பொருளாதாரத்தை பாதித்து வரும் நெருக்கடியை சமாளிக்க எந்த நடவடிக்கையும் இல்லாததாக அமைந்துள்ளது. 

சாதாரண மக்களுக்கு உதட்டளவில் சேவை செய்வதாக உள்ளது. பொருளாதாரத்தின் ஆழமான அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்ய ஓரளவே நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பகல் கனவுதான் இந்த பட்ஜெட் என்று நான் விவரிக்க விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியில் மந்தம் கணிசமான பணவீக்கம் ஆகியவை நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய முப்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கையே இதற்கு காரணம். தற்போது மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. எரிபொருள் விலை உயர பொருளாதார வீக்கத்தை ஏற்படுத்தவும் ரயில்வேயின் சரக்கு கட்டணம் உயர்வால் பணவீக்கத்தை ஏற்படுத்தி நிலைமையை மிகவும் மோசமாக்கவும் ஐ.மு.கூட்டணி அரசு தன்னால் இயன்றதை செய்துள்ளது. வருங்காலத்தில் இதனால் பணவீக்கத்தை குறைப்பது இயலாத ஒன்று பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக திட்டங்களை தீட்டாமல் அதனை சமாளிக்கவும் போதுமான நடவடிக்கை அமையாமலும் பட்ஜெட் அமைந்துள்ளது. 

தன்னிறை மேம்பாடு குறித்து வெறும் உதட்டளவிலேயே கூறப்பட்டுள்ளது. 2012 -2013 க்கான மறு ஆய்வு திட்டங்களில் மிக முக்கிய சமூக துறைகளில் செய்யப்பட்டுள்ள கடுமையான நிதிவெட்டுக்கள் மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கக்கூடியதாக உள்ளது. திட்டச்செலவு 2012 -2013 -ல் ரூ 5,21,025 கோடியிலிருந்து ரூ.4,29,187 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய நிதிக்குறைப்பு பல பதிலளிக்காத கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு வேலை திட்டங்களில் மாநில அரசுகள் ஏற்கனவே போதுமான அளவு செலவு செய்துள்ளன. நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் மறுதிட்டங்கள் எதுவும் செய்ய இயலாது. மாநில அரசுகளின் நடப்பாண்டு செலவினத்தில் மத்திய அரசு நிதி பற்றாக்குறை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட முக்கிய அனுமதி நிதிகளில் நிதி குறைப்பு மொத்தமாக குறைக்கப்படும் என்ற நிதியமைச்சரின் உறுதிமொழி விவாதத்திற்குரியது. 

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் திட்டங்களில் மிகுந்த நிதிக்குறைப்பு  செய்யப்பட்டுள்ளது. மிகமுக்கிய சமூக திட்டங்களில் ஏற்பட்டுள்ள அதிக நிதி தேவை 2013 -14- க்கு வழக்கப்படும் என்ற உறுதிமொழி என்ன ஆயிற்று. இந்திய அரசின் பட்ஜெட் நடவடிக்கைகளுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு தடைக்கல்லாக உள்ளது. 2012 -13 ம் ஆண்டு திட்டங்களில் செய்யப்பட்டுள்ள நிதி குறைப்பை திரும்ப பெற வேண்டும். உறுதியளிக்கப்பட்ட திட்டங்களுக்கு முழு நிதியை வழங்கவேண்டும். 

நிதி கட்டமைப்பு திட்டங்களில் பட்ஜெட்டின் அறிவிப்புகள் கடந்த காலங்களை போல முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக அமையாது. திட்டங்களை அமல்படுத்துவதில் உத்தேசிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிகள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு உதவிகரமாக உள்ளது. மொத்த பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களுக்கு 2012 ஆண்டுக்கு தரவேண்டிய நஷ்ட ஈடு தொகை குறித்து எதுவும் கூறப்படவில்லை. 2013 -14 ம் ஆண்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள 9 ஆயிரம் கோடி ரூபாய் போதுமானதல்ல.

பட்ஜெடில் தெரிவிக்கப்பட்டுள்ள பற்றாக்குறை அந்நிய முதலீடுகளுக்கு உற்சாகம் தருவதாக மட்டுமே அமைந்துள்ளது என்பதை நிதியமைச்சர் எண்ணிபார்க்க வேண்டும் என்பது இதில் உள்ள விசித்திரம் ஆகும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்க ஆய்வு எதுவும் இல்லை. ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் குறைந்தபட்சமானதாகும். ஆனால் அந்நிய முதலீட்டுக்கு பல வாய்ப்புக்கள் உள்ளன. உள்நாட்டு முதலீட்டாளர்களை விட அந்நிய முதலீட்டாளர்களுக்காகவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதையே இந்த பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்