முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க மாநிலத்தில் அமைதியாக நடந்த 2ம் கட்ட தேர்தல்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,ஏப்.24 - மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று 50 சட்டமன்ற தொகுதிகளில் 2 ம் கட்ட வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாகவும், அதே நேரத்தில் அமைதியாகவும் நடைபெற்றதாக தேர்தல் கமிஷன் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 18 ம் தேதி 54 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்றது. அப்போது வாக்குப் பதிவு மிக விறுவிறுப்பாக நடந்ததாக தகவல்கள் தெரிவித்தன. முதல் 4 மணி நேரத்தில் அன்றைய தினம் 32 சதவீத வாக்குகள் பதிவானது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. 

இந்த நிலையில் 2 ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் 2 தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் நேற்று 50 தொகுதிகளில் 2 ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 3 மாவட்டங்களில் உள்ள 50 தொகுதிகளில் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் 4 மணி நேரத்தில் இம்முறை 36 சதவீதம் அதாவது முதல்கட்ட வாக்குப்பதிவை விட கூடுதலாக வாக்குகள் பதிவானது. காலை 11 மணி வரை 36 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. 

மேலும் மிக அமைதியாக தேர்தல் நடைபெற்றதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதே நேரம் முறைகேட்டில் ஈடுபட்ட 2 தேர்தல் அதிகாரிகள் நீக்கப்பட்டனர். குறிப்பிட்ட கட்சிக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என்று வாக்காளர்களை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இவர்கள் அங்கிருந்து நீக்கப்பட்டனர். அதே போல இ. கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தேர்தல் ஏஜண்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து தபால் ஓட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. முர்சிதாபாத் மாவட்டத்தில் பரத்பூர் சட்டமன்ற தொகுதியில் பூத் எண் 2 ல் பணியாற்றிய தேர்தல் அதிகாரியும், நாடியா மாவட்டம் ரணகத் தொகுதியில் பூத் எண் 101 ல் பணியாற்றிய தேர்தல் அதிகாரியும் அங்கிருந்து நீக்கப்பட்டு புதிய தேர்தல் அதிகாரிகள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டதாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சகானா தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் இன்னும் 4 கட்ட தேர்தல்கள் பாக்கியுள்ளது. இந்த தேர்தல்கள் அனைத்தும் முடிந்த பிறகு மே மாதம் 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்