முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 13 - காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதம் வருமாறு:- காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்ட பிறகு கடந்த பிப் 22 -ம் தேதி தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் ஒழுங்குமுறை குழுவினை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக இதை நான் எழுதுகிறேன். கர்நாடக அரசு அம்மாநிலத்தில் உள்ள நான்கு அணைகளில் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு அணைகளில் இருந்து தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை கோடைக்கால பாசனத்திற்கு திறந்து விட்டு வற்றிப்போக செய்கிறது. ஆனால் கோடைக்காலத்தில் அணைகளில் தேங்கி உள்ள நீரை பயன்படுத்தாமல் அவைகளுக்கு வரும் நீர் வரத்து மட்டுமே பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும். பொதுவாக கர்நாடத்தில் காவேரி நீர் பிடிப்பு பகுதியில் ஏப் 3 -வது வாரத்திலிருந்து மழை பெய்யத்தொடங்கி அணைகளுக்கு நீர் வரத்து ஆரம்பித்து விடும். அதையே கோடைக்காலத்தில் பயன்படுத்த வேண்டும். ஆனால் கடந்த காலங்களிலும் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடக அரசு மதித்தது இல்லை. அதைப்போலவே இப்போதும் இறுதித்தீர்ப்பை பற்றி கவலைப்படாமல் கோடைக்கால பசானத்திற்கு அணைகளில் உள்ள தண்ணீரை திறந்து விட்டுள்ளது. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் ஜூன் 1- ம் தேதி முதல் ஜன 31 -ம் தேதி வரை மட்டுமே அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அங்குள்ள அணைகளிலிருந்து கோடைப்பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது. அதனால் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மே முதல் வாரத்திலிருந்து கர்நாடகாவில் அணைகளிலிருந்து காவேரி நீர் திறப்பதை கண்காணிக்க வேண்டும். இதனால் 2013 -14 -ம் ஆண்டு தமிழக நீர் பாசனத்திற்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் என கருதுகிறேன். எனவே இந்த சூழ்நிலையில் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று தாங்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதன் மூலம் இறுதித்தீர்ப்பை உணர்வு பூர்வமாகவும், அரசிதழ் ஆணையை செயல்முறைப்படுத்தவும் முடியும். ஆகையால் இந்த விவகாரத்தில் தங்களின் சாதகமான முடிவை எதிர்ப்பார்க்கிறேன். தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்