கொழும்பு, மார்ச். 23 - தன்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திர கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் செயற்திட்ட கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,
பேய்க்கு பயம் வந்தால் மயானத்தில் வீடுகள் கட்டுவதில்லை. நமக்கு மிகவும் நெருக்கமான இந்தியா இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. என்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். இது குறித்து நாம் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான நட்புறவு ஒரு போதும் குறையாது. இலங்கை சுதந்திரக் கட்சி பயங்கரவாதத்தை ஒழித்தது. பிளவடைந்த நாட்டை ஒரே தேசமாக ஆக்கியுள்ளோம். பொய் மற்றும் வதந்திகளுக்கு பெரிய அளவில் சக்தி இருப்பது தெரிகிறது. ஆனால் இவற்றை எல்லாம் வெல்ல கட்சி என்ற முறையில் எங்களால் முடியும்.
கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. கட்சியின் செயலாளர் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறப் போவதாக வதந்திகள் பரவியுள்ளன. இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்கின்றனர் என்றார்.