முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய கோப்புகளை அழிக்க தி.மு.க. அரசு முயற்சி தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. புகார்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.- 25 - புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள தலைமைச் செயலகத்திலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலகத்திற்கு அரசு அலுவலகங்களை மாற்றுகிறோம் என்ற பெயரில் சில முக்கிய கோப்புகளை அழிக்க தி.மு.க. அரசு முயற்சிக்கிறது. இது தேர்தல் விதிமுறைக்கு முறனானது. எனவே, இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்தவும், இதனை கண்காணிக்க சி.ஆர்.பி.எப். போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், வடசென்னை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சட்டப்பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, தேர்தல் ஆணையர்கள் வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஆகியோருக்கு ஒரு மனுவினை அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தற்போது தமிழகத்தில் உள்ள காபந்து அரசு புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அரசு அலுவலகங்களை மாற்றி வருவதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தேர்தல் வரைமுறைகளுக்கு மாறான இந்த செயலில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள அரசுத்துறை அலுவலகங்களை புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலகத்திற்கு மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இடமாற்றம் செய்கிறோம் என்ற பெயரில் அரசின் முக்கிய கோப்புகளை அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
தற்போதுள்ள அரசு ஒரு காபந்து அரசாகும். தினசரி அரசு நடவடிக்கைகள் , சட்டம் ஒழுங்கை பராமரித்தல், அரசு ஊழியர்களுக்கான ஊதியம் வழங்குதல் சில குறிப்பிட்ட பணிகளை மட்டுமே செய்வதற்கு அதிகாரம் உண்டு.
எந்த முக்கிய கொள்கை முடிவுகளையும் இந்த அரசு மேற்கொள்ள முடியாது. அரசு துறைகளை மாற்றும் முக்கியமான கொள்கை முடிவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, புதிய அரசு அமைந்த பிறகுதான் இதுபோன்ற பணிகளை செய்ய முடியும்.
மத்திய அரசின் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் அரசு துறைகளை மாற்றும் இந்த முடிவு என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக அலுவலகம் இடமாற்றம் செய்வதை தேர்தல் ஆணையம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அரசின் முக்கிய கோப்புகளை பாதுகாக்க வேண்டும்.
இதனை கண்காணிக்க புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சி.ஆர்.பி.எப். போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்