கேரள முதல்வர் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் அமளி

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஏப்.4 - குடும்ப பிரச்சினையில் அமைச்சரை காப்பாற்ற முயன்ற முதல்வர் உம்மன் சாண்டி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரள சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். 

கேரள மாநிலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் கணேஷ் குமார். இவருக்கும் மனைவிக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக தகராறு இருந்து வந்துள்ளது. மனைவியை கணேஷ் குமார் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் உம்மன் சாண்டியிடம் மனைவி யாமினி புகார் செய்துள்ளார். முதல்வர் நடவடிக்கை எடுக்காததால் போலீசில் யாமினி புகார் செய்துவிட்டார். இதனையொட்டி அமைச்சர் பதவியை கணேஷ் குமார் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் யாமினி முன்கூட்டியே புகார் கூறியும் முதல்வர் உம்மன் சாண்டி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்பியுள்ளனர். 

சட்டசபை நேற்று இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை சேர்ந்த உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு சென்று கணேஷ் குமாரின் மனைவி யாமினி புகார் செய்தும் முதல்வர் உம்மன் சாண்டி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும் கணேஷ் குமாரை காப்பாற்ற உம்மன் சாண்டி முயன்றுள்ளார் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த விஷயம் தொடர்பாக எங்கள் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் கோரிக்கையை கேள்வி நேரத்தின்போது முதல் நடவடிக்கையாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி வலியுறுத்தி கேட்டனர். கூச்சல் குழப்பம் அதிகமாகவே சபையை சபாநாயகர் கார்த்திகேயன் ஒத்திவைத்தார். சபை மீண்டும் கூடியது. அப்போது கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. கேள்வி நேரத்தின்போதும் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை தூக்கிக்கொண்டு சபைக்கு வந்தனர். குடும்பப் பிரச்சினையால் யாமினி துன்புறுத்தப்பட்டபோது அவர் கொடுத்த புகார் மீது முதல்வர் உம்மன் சாண்டி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் யாமினியை ஏமாற்றி உள்ளார் என்றும் அட்டைகளில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மேலும் சபையில் கேள்வி நேரத்திற்கு பின்பு எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் எழுந்து நான் நேற்று வேறுபிரச்சினை காரணமாக எழுப்பியிருந்த கோரிக்கையை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் இன்று காலையில் நான் கேட்டுக்கொண்டது குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகர் கார்த்திகேயனை பாரத்து கேட்டார். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் கார்த்திகேயன், எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்ட கோரிக்கையை கவன ஈர்ப்பு வந்தவுடன் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உறிதி அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: