தமிழகம் கொண்டு வரப்பட்டார் வீரப்பன் மனைவி

Veerappan

பெங்களூர்,ஏப்.26 - சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெங்களூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டார். சந்தன மரம் கடத்தலில் ஈடுபட்டதோடு உயர் போலீஸ் அதிகாரிகள், சிவில் அதிகாரிகள், போலீசார் மற்றும் அப்பாவி மக்களை படுகொலை செய்தவன் வீரப்பன். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருந்தபோது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கடும் நடவடிக்கையால் வீரப்பன் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். அவனுடைய மனைவி முத்துலட்சுமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக கர்நாடக மாநில கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையொட்டி கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநில போலீசார் முத்துலட்சுமியை கைது செய்து பெங்களூர் சிறையில் அடைத்தனர். ஜாம்ராஜ்நகர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் முத்துலட்சுமி மீது கடைசியாக தொடரப்பட்ட 5 வழக்குகளில் போதுமான ஆதாரம் இல்லாததால் அவரை கோர்ட்டு விடுதலை செய்தது. இதனையொட்டி முத்துலட்சுமி பெங்களூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேசமயத்தில் முத்துலட்சுமி மீது கோபிசெட்டிபாளையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் உள்ளது. இந்த புகார் தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி முத்துலட்சுமியை பெங்களூரில் இருந்து தமிழக போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ