முக்கிய செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
Sivakasi 0

சிவகாசி,ஏப்.27 - சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிவகாசிக்கு அருகே உள்ளது நதிக்குடி. இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள 6 கட்டிடங்களில் மூலப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. வெவ்வேறு வகையான வெடி பொருட்களை ஒன்றாக சேர்த்து எடை போட்டு தொழிலாளர்கள் தினமும் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். வழக்கமாக நேற்று காலை 7 பேர் மூலப் பொருட்களை எடை போட்டு கலக்கி கொண்டிருந்தனர். இதில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இதனால் வெடி பொருட்கள் வெடித்து சிதறின. சுமார் 5 கி.மீ. தூரம் வரை சப்தம் கேட்டது. இதில் அந்த 6 கட்டிடங்களும் முற்றிலும் தரை மட்டமாகின. இது குறித்து சிவகாசி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரி சண்முகராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். சிவகாசி டி.எஸ்.பி. பெருமாள், தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 2 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ஒருவரும் ஆக 3 பேர் பலியானார்கள். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: