முக்கிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டதில் 2 போலீஸ்காரர்கள் பலி

Kash-police 0

ஸ்ரீநகர், ஏப்.27 - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான நவ்காம் பைபாஸ் ரோட்டில் நேற்று காஷ்மீர் போலீசார் ஒரு வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தீவிரவாதிகள் அந்த ரோந்து வாகனத்தை நோக்கி தானியங்கி எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 2 போலீசார் அதே இடத்தில் பலியானார்கள். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். 

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவிடம் லெப்டினண்ட் ஜென்ரல் எஸ்.ஏ.ஹாசைன் விளக்கம் அளித்த அடுத்த சில மணி நேரத்திற்கெல்லாம் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரவு ரோந்து சுற்றிவிட்டு நவ்காம் என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோதுதான் இந்த போலீஸ் வாகனம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் போலீஸ் தலைமை காவலர் அப்துல்லா காலிக், காவலர் பரூக் அகமது ஆகியோர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மற்ற போலீஸ்காரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 2 போலீஸ்காரர்களை கொன்றுவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஏராளமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருப்பதாக உளவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: