முக்கிய செய்திகள்

பீகாரில் போலி ஸ்டாம்புகள் - முத்திரைத் தாள்கள் பறிமுதல்

Bihar-Map 0

 

பாட்னா, ஏப்.27 - பீகார் மாநிலம் பாட்னாவில் ரூ. 1 கோடி மதிப்புள்ள போலி ஸ்டாம்புகள் மற்றும் முத்திரை  தாள்களை போலீசார் பறிமுதல்  செய்து இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் பாட்னாவில் போலி கோர்ட்டு ஸ்டாம்புகள் மற்றும் கோர்ட்டு முத்திரை தாள்கள்  புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதை அடுத்து பாட்னா மாவட்ட போலீஸ் அதிகாரி எஸ்.வி.ராவ் லண்டே தலைமையில் போலீஸ் தனிப்படை ஒன்று பாட்னாவில் நள்ளிரவு சோதனை நடத்தியது. 

நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த சோதனையின் போது பாட்னா நகரில் இரு வீடுகளில் கோர்ட்டு முத்திரை தாள்கள், கோர்ட்டு  ஸ்டாம்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 

இவற்றை போலீசார் பறிமுதல்  செய்தனர். இந்த கோர்ட்டு  ஸ்டாம்புகள் மற்றும் கோர்ட்டு முத்திரை தாள்களின் மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என்று மாவட்ட போலீஸ் அதிகாரி ராவ் லண்டே தெரிவித்தார்.

இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் 4 பேரும் இந்த ஸ்டாம்புகளை அச்சடித்து கொடுத்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த போலி முத்திரைகள் மற்றும் முத்திரை தாள்கள் தயாரிப்பில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போலி ஸ்டாம்புகள் எங்கெல்லாம் வினியோகிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு  முன்பு போலி முத்திரைத்தாள் மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு போலி முத்திரைத்தாள்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு இது  தொடர்பாக அப்துல் கரீம் தெல்கி என்பவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். பரபரப்பான இந்த வழக்கில் தெல்கிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று  பெரிய அளவில் இந்த போலி ஸ்டாம்புகள் வினியோகிக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: