கொழும்பு, ஏப். 13 - கொழும்பு துறைமுகத்தில் டக்யார்டில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்புத் துறைமுகத்தில் கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டக்யார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டு இலங்கை நாட்டவருக்குப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகள் இலங்கை அரசு மேற்கொள்ளப்போவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் கொழும்புத் துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனா மேற்கொள்ள இருப்பதால் இந்தியர்களுக்குப் பதில் சீனர்கள் பணியில் அமர்த்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் தமிழ்நாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்க மாட்டோம் என்று கொழும்புத் துறைமுக பொதி இறக்கும் பணியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.