முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரகச் சாலைகள் பராமரிப்புத் திட்டம்: முதல்வர்

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப். 16 - ஊரகச் சாலைகள் பராமரிப்புத் திட்டம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார் .சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- 

ஒரு மாநிலத்தின் உயிர் நாடியாக விளங்குவது கிராமங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அதனால் தான், மகாத்மா காந்தி கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுமாறு படித்த இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  கிராமங்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த எனது தலைமையிலான அரசு, கிராம முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

கிராம முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பது சாலைகள் ஆகும்.  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் 74,981.29 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தார்ச் சாலைகள் உள்ளன. இச்சாலைகளை வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் பராமரிப்பது இன்றியமையாததாகும்.  

இச்சாலைப் பராமரிப்புப் பணிகள், தற்போது நடப்பிலுள்ள ஊரக வளர்ச்சித் திட்டங்களின் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருவதால் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.

இதனைக் கருத்திற் கொண்டு, கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தார்ச் சாலைகளை பராமரிக்க ஏதுவாக, ஊரகச் சாலைகள் பராமரிப்புத் திட்டம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். இதற்கான நிதி மாநில நிதிக்குழு மற்றும் 13-வது நிதிக் குழு ஆகியவற்றின் நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல் சாலை அமைக்கும் செலவினத்தில் சேமிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை பெருமளவில் ஏற்படுத்தி தூய்மைக்கு கேடு விளைவிக்கும் மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி கிராமப் பகுதிகளில் தார்ச் சாலைகள் அமைக்கும் பணியினை எனது   தலைமையிலான   அரசு   மேற்கொண்டு  வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கிராம ஊராட்சிப் பகுதிகளில் 153 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1254.13 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 1002 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன. இச்சாலைகள் அமைக்க 917 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டும் 1000 கிலோ மீட்டர் நீளமுள்ள தார் சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

கிராமப்புறத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, குடியிருப்புகளை அலகாகக் கொண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாபெரும் செயல்திட்டம் `தாய்' என்ற பெயரில் 2011-12-ல்  என்னுடைய  அரசால்  தொடங்கப்பட்டது.  அத்திட்டத்தின் கீழ் கடந்த இரு ஆண்டுகளில் ஏறத்தாழ 97,000 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இவை தவிர, 45 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், மற்றும் 416 ஊராட்சி அலுவலகக் கட்டடங்களுக்கான பணிகள்  110 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 2011-12 ஆம் ஆண்டில் பயன்பாடற்று இருந்த 12,796 ஊரக மகளிர் சுகாதார வளாகங்கள் 170 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதே போல, 2012-13 ஆம் ஆண்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள 36,230  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 3,416 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் பிரதானக் குடிநீர்க் குழாய்கள் 175 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 13,954 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள அனைத்து பணிகளும்  ஏப்ரல், 2013 இறுதிக்குள் முடிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் போதிய இடவசதி இல்லாமல் சிறிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன.  வட்டார அளவில், அந்தந்த வட்டாரத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தும் அலகாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் திகழ்கின்றன. அந்தந்த வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், தங்களின் அடிப்படை தேவைகளான வீட்டு வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள், சாலை வசதி மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுக வேண்டியுள்ளது.  ஒன்றிய அளவிலான மக்கள் பிரதிநிதிகள் தங்களின் வட்டாரத்திற்கு தேவையான பணிகளை நிறைவேற்ற அரசு அலுவலர்களுடன் சேர்ந்து செயல்படவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முக்கிய மையமாக செயல்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு தலா 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடங்கள் கட்டப்படும். இதற்கென  50 கோடி ரூபாய் நிதி ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்.  புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களில்  பொதுமக்களுக்கான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, பெண்களுக்கான கழிவறை வசதி, கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு மற்றும் இதர வசதிகள் அமையப் பெற்றிருக்கும்.

ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், போதிய இட வசதி இல்லாமல் பழுதடைந்த நிலையில் இருப்பதும் எனது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் கட்ட மக்கள் பிரதிநிதிகள் இடமிருந்தும் கோரிக்கைகள்  வரப் பெற்றுள்ளன.  இதற்கிணங்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 200 கிராம ஊராட்சி மன்றங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கிராம ஊராட்சி மன்ற கட்டடங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.   இந்த புதிய கிராம ஊராட்சி அலுவலக கட்டடங்களில், மன்ற கூட்ட அறை, பொருட்களுக்கான தளவாட அறை, கழிவறை வசதி  போன்ற வசதிகள் அமையப் பெற்றிருக்கும்.  

ஊரகப் பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்கள், சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், நியாய விலைக் கடைகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கக் கட்டடங்கள், ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், நுாலகக் கட்டடங்கள், இடுகாடு மற்றும் சுடுகாடுகள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டிகள் மற்றும் விளையாட்டு மையங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளினால் சரிவர பராமரிக்கப்படாமல், மக்களால் முழுமையாக   பயன்படுத்த    இயலாத   நிலை    உள்ளது. இந்த நிலையை சரி செய்திடும் வகையில்,  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுதுணையாக ஊரகச் சொத்துக்களை பராமரிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ``ஊரகக் கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்புத் திட்டம்'' என்ற திட்டத்திற்காக 2013-2014 ஆம் ஆண்டில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் தமிழகத்திலுள்ள அனைத்து ஊரகப் பகுதிகளும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக உருவாக வழி வகுக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு  முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்