முக்கிய செய்திகள்

கனிமொழி மீது கறுப்புப்பண வழக்கு: அமலாக்கப்பிரிவு திட்டம்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      அரசியல்
Kanimozhi2

புதுடெல்லி, ஏப்.27 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி. மீது கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் ஆர்.கே.சந்தோலியா, சித்தார்த் பெகூரா, ஸ்வான் டெலிகாம் நிறுவனர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஊழல் வழக்கில் ஏற்கனவே 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று முன்தினம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகவும், கூட்டுச் சதி செய்ததாகவும் கனிமொழி மீது அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற மே மாதம் 6 ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ்(பி.எம்.எல்.ஏ.)வழக்கு பதிவு செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கனிமொழி எம்.பி.க்கு 20 சதவீதமும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகளைக் கொண்ட கலைஞர் டி.வி.யின் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு கனிமொழி எம்.பி. விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்திற்கு வரவழைக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு  அலுவலகத்தில்  விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஏற்கனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் பெற்றவர்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.50 கோடி கைமாறியுள்ளது தொடர்பாகவும், இந்த உரிமம் பெற்றவர்களுக்கும் ஆ.ராசாவுக்கும் அதேபோல கனிமொழிக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அமலாக்க பிரிவு அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என தெரிகிறது. 

செசெல்ஸ் தீவைச் சேர்ந்த ஷிவா குரூப் கம்பெனி, ஹைடெக் ஹவுசிங் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆகியவற்றிடம் இருந்து தி.மு.க. குடும்பத்தினருக்கு சொந்தமான கலைஞர் டி.வி. ரூ. 50 கோடியை பெற்றுள்ளது. இந்த பணப்பட்டுவாடா பல  பரிவர்த்தனைகளாக செய்யப்பட்டுள்ளது. இந்த ஷிவா குரூப் கம்பெனி என்பது கடந்த 2008 ஆம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு கம்பெனிகளில் ஒன்றால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்வான் டெலிகாம் கம்பெனியை நிர்வகிக்கும் டி.பி. குழுமத்தில் இருந்து கலைஞர் டி.வி. ரூ. 200 கோடியை பெற்றுள்ளது என்று சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆ.ராசாவை விசாரணைக்கு அழைத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையை துவக்கியபிறகு இந்த ரூ.200 கோடி பணத்தை கலைஞர் டி.வி. வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டதாகவும் சி.பி.ஐ. கூறியுள்ளது. 

ரிலையன்ஸ் டெலிகாம் கம்பெனியின் 3 முக்கிய நிர்வாகிகளான குழும நிர்வாக இயக்குனர் கெளதம் தோஷி, இக்கம்பெனியின் இரண்டு துணைத் தலைவர்களான ஹரி நாயர் மற்றும் சுரேந்திர பிபாரா ஆகியோர் மீதும் கறுப்புப்பண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: