பயங்கரவாதிகளுடன் நீதிபதிக்கு தொடர்பு: முஷாரப் கட்சி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப். 23 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு ஜாமீன் நீட்டிப்பு வழங்க மறுத்த நீதிபதிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதென்றும், முன்விரோதம் காரணமாகவே அது போன்ற உத்தரவை அவர் பிறப்பித்தார் என்றும் முஷாரப்பின் அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

2007 ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது அவசர நிலையை பிரகடனப்படுத்திய முஷாரப், 60 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்து தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டார். அப்போது நீதிபதி சவுகத் அஜீஸ் சித்திக்கும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். முஷாரப் மீது குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கை தற்போது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சவுகத் அஜீஸ் விசாரித்தார். முஷாரப்புக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீனை கால நீட்டிப்பு செய்ய மறுத்த சவுகத் அஜீஸ் கைது உத்தரவை பிறப்பித்தார். 

மேலும் முஷாரப்புக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் அவர் உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிபதி சவுகத்திற்கு பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதாக முஷாரப்பின் அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆசியா இஷாக் கூறுகையில், 

2007 ம் ஆண்டு லால் மசூதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முஷாரப் உத்தரவிட்டார். அதில் 100 பேர் கொல்லப்பட்டனர். மசூதியின் மத குரு அப்துல் அஜீஸ் கைது செய்யப்பட்டார். அப்போது வழக்கறிஞராக இருந்து சவுகத், மதகுரு அப்துல் அஜீஸ் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார். தங்கள் மீதான தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் முஷாரப்பை கொன்றழிப்போம் என்று அந்த அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது. அதோடு ராவல் பிண்டி நாடாளுமன்ற தொகுதியில் 2002 ல் சவுகத் போட்டியிட்டுள்ளார். எனவே இத்தகைய பின்னணி உள்ள சவுகத் அஜீஸ் சித்திக்கை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இருந்து மாற்ற வேண்டும். முஷாரப்புக்கு எதிரான அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார். 

இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக முஷாரப்பை துணை சிறைச்சாலையாக மாற்றிய பண்ணை வீட்டில் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.  அவ்வீட்டில் உள்ள இரண்டு அறைகளை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முஷாரப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், உறவினர்கள், கட்சி பிரமுகர்கள் உட்பட பார்வையாளர்கள் யாரும் முஷாரப்பை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறை அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: