முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் லாரி மீது பஸ் மோதல்: 4 பேர் பரிதாபச்சாவு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, ஏப். 23 - திருச்சியில் வழிகேட்க நடுரோட்டில் லாரியை நிறுத்தியதால் பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 4 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் பூமிநாதன் ஓட்டிவந்தார். கண்டக்டராக மதுரையை சேர்ந்த தங்கவேல் (வயது 40) என்பவர் பணியில் இருந்தார். அந்த பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர். 

இந்தநிலையில் அந்த பஸ் நேற்று  அதிகாலை 4.15 மணியளவில் திருச்சி மன்னார்புரம் காந்தி நகர் அருகே ராணுவ பயிற்சி மையம் அருகே வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற சிமெண்ட் கலவை ஏற்றி  வந்த லாரி திடீரென நடுரோட்டில் நின்றது. அப்போது பின்னால் வந்த அரசு விரைவு பஸ் லாரி மீது பயங்கரமாக மோதியது. 

இதில் பஸ்சின் முன்பகுதி அடையாளம் காண முடியாத அளவுக்கு அப்பளம் போல் நொறுங்கியது. அத்துடன் முன்வரிசை இருக்கைகள் முற்றிலும் சிதைந்து உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் கண்டக்டர் உள்பட 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

அவர்கள் பெயர், விபரம் வருமாறு:- 

1.தங்கவேல், கண்டக்டர். 

2.செந்தில்ராணி (45), க/பெ. கணேசன், திருகோணம், மதுரை. 

3.சரோஜினி (40), மதுரை. 

மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த சீனிவாசன் (42), சென்னை குரோம் பேட்டையை சேர்ந்த தனபால் (37), திருப்பூரை சேர்ந்த ஷீலாதேவி, சிவகாசியை சேர்ந்த பாக்கியலட்சுமி, தண்டபாணி மகன் பிரபாகரன் (11) உள்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர். 7 பேர் லேசான காயமும் அடைந்தனர். 

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது தடைபட்டிருந்த போக்குவரத்தை சரிசெய்தனர்.  மேலும் 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

விபத்தில் இறந்த கண்டக்டர் மற்றும் 2 பெண்கள் உடல்கள் பஸ்சின் இருக்கைக்குள் சிக்கிக்கொண்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்திற்கு காரணமான லாரி கடலூரில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு வந்தது. லாரியின் டிரைவராக விருதாச்சலத்தை சேர்ந்த வீரமணி (23) என்பவரும், கிளீனராக செல்வராஜும் இருந்தனர். 

அதிகாலை நேரத்தில் பாதை தெரியாமல் திருச்சி நகருக்குள் நுழைந்த அந்த லாரியின் டிரைவர் வீரமணி எந்த பாதையில் செல்வது என்று குழம்பியபடி வந்துள்ளார். அப்போது வழிகேட்பதற்காக பின்னால் வந்த வாகனத்தை கவனிக்காமல் நடுரோட்டில் லாரியை நிறுத்தியுள்ளார். அந்த சமயத்தில்தான் அரசு விரைவு பஸ் மோதியுள்ளது. 

இதையடுத்து உடனடியாக டிரைவர் வீரமணி எடமலைப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். விபத்தில் சிக்கிய அரசு விரைவு பஸ்சின் கண்டக்டர் தங்கவேலுவுக்கும், பயணிகளுக்கும் சென்னையில் பஸ் புறப்பட்டதில் இருந்தே வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. 

இதுபற்றி சிலர் பஸ் டெப்போவில் புகார் கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இறுதியில் இந்த விபத்தில் கண்டக்டர் பலியாகி விட்டாரே என்று பயணிகள் அனைவரும் புலம்பியது அங்கு நின்றிருந்தோரை வேதனையில் ஆழ்த்தியது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்