டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி: சாய்னா

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 24 - டெல்லியில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளால் தனியாக நடப்பதற்கு கூட பயமாக இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பு பகலிலேயே கேள்விக்குறியாக உள்ளது என்று நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். தனியாக பெண்ணொருத்தி நகைகள் அணிந்து, இரவினில் பாதுகாப்பாக வலம் வருகிறாளோ, அன்று தான் நாம் முழுமையான சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம் என மகாத்மா காந்தி கூறினார். ஆனால் இன்றோ இந்தியாவின் தலைநகர் டெல்லியிலேயே பெண்களின் பாதுகாப்பு பகலிலேயே கேள்விக்குறியாக உள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக உள்ள டெல்லி மாறிவிட்டதாக பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

அந்த வகையில் டெல்லியில் அதிக அளவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த முறை நான் டெல்லி வந்த போது பாலியல் பலாத்கார சம்பவம் நடந்ததைப் போன்று இப்போது மீண்டும் நடந்துள்ளது. டெல்லியில் என்ன நடக்கிறது என்று நான் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இதனை தடுத்து நிறுத்த உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும். இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் டெல்லியின் புகழை உண்மையில் கெடுக்கின்றன. இதனால் டெல்லியில் தனிமையில் நடப்பதற்கு கூட பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சாய்னா, டெல்லியில் இன்று தொடங்க உள்ள இந்தியன் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளார். 18 நாடுகளைச் சேர்ந்த 220 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: