இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் கூட்டம் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.24 - இந்திய எல்லைக்குள் சீன படைகள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஊடுருவிய பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் கொடி அமர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து சதி செய்து வருகிறது. கடந்த குளிர்காலத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். இருந்தபோதிலும் தீவிரவாதிகள் நினைத்தது மாதிரி அதிக அளவில் ஊடுருவ முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய காவல் நிலையங்கள் மீது அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணமடைந்தனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்ததோடு ஒருவரின் தலையை துண்டித்துக்கொண்டு சென்றுவிட்டனர். இந்த பிரச்சினை பூதாகரமாக கிளம்பியது. பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர் மன்னிப்பு கேட்டதால் பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டது. தற்போது கோடை காலமாக இருப்பதால் லடாக் பகுதியில் கடந்தவாரம் சீன ராணுவத்தினர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். அதோடுமட்டுமல்லாது சீனா ராணுவ ஹெலிகாபடர்கள் 2 இந்தியாவிற்குட்பட்ட லடாக் பகுதிக்கு மேலே ஊடுருவியது. இதற்கு இந்திய ராணுவத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் புதுடெல்லியில் உள்ள சீனா தூதர் வீ வீயை இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாய் புதுடெல்லியில் உள்ள தெற்கு பிளாக்கிற்கு அழைத்து சீன ஊடுருவலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் ஊடுருவல் பிரச்சினைக்கு தீர்வுகாணும்படியும் வீ வீயை மாத்தாய் கேட்டுக்கொண்டார்.

இந்திய எல்லையை கட்டிக்காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். 

இந்திநிலையில் ராணுவ வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஊடுருவல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட இந்திய,சீன ராணுவ உயரதிகாரிகளின் கொடி அமர்வு கூட்டம் நேற்று லடாக் பகுதியில் உள்ள தெளலத் பெக் ஓல்டி பகுதியில் நடைபெற்றது. அப்போது இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்தை தொடர்புகொண்டு கேட்டதற்கு சீனா வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி கூறியதையே கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சீன எல்லையை பாதுகாக்க ஹெலிகாப்டர் ரோந்து நடந்ததாகவும் இந்த ரோந்து சீன எல்லைக்குள்ளேயே நடந்ததாகவும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்றும் சீன வெளியுறவுத்துறை அதிகாரி கூறியதையே சீன தூதரகரமும் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்: