கர்நாடக தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் லிங்காயத் மடங்கள்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

ஹூப்ளி,ஏப்.24 - கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை லிங்காயத் மடங்கள் நிர்ணயிக்கும் சூழ்நிலை அங்கு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்துமத வளர்ச்சிக்கு இரட்டை நகரங்களான ஹூப்ளி மற்றும் தார்வார் ஆகிய நகரங்கள் சிறந்த முறையில் உதவி வருகின்றன. அதோடுமட்டுமல்லாது இசை மற்றும் கலை வளர்ச்சிக்கும் இந்த நகரங்கள் பெரிதும் உதவி வருகின்றன. இது மாநிலத்தின் வடபகுதியில் இருக்கிறது. அந்த பகுதியில் லிங்காயத் இன மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். லிங்காயத்தானது இந்துமதத்தின் ஒரு பிரிவாகும். கடந்த 1990-ம் ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இருந்துதான் பாரதிய ஜனதா தனது வளர்ச்சியை தொடங்கியது. பின்னர் இந்த பகுதியானது பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மையமாக திகழ்ந்தது. அந்த பகுதியில் இரு சமூகத்தினர்களிடையே ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி பாரதிய ஜனதா வளர்ந்ததாக கூறப்படுகிறது. ஹூப்ளியில் தேசிய கொடி ஏற்றிய விவகாரத்தை ஒரு வாகனமாக வைத்து பாரதிய ஜனதா வளர்ந்தது. பின்னர் பாரதிய ஜனதா கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இந்தாண்டு லிங்காயத் இன மக்களிடையே பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதில் ஒற்றுமை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு லிங்காயத் மடாதிபதிகளிடம் ஆசி பெற்றார். லிங்காயத் இன மக்கள் மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆதரவு கொடுத்ததால்தான் கடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 105 தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது என்று ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார். அதனால்தான் லிங்காயத் மடங்கள் வளர்ச்சிக்கு பா.ஜ. அரசு அதிக அளவில் நிதியுதவி செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் லிங்காயத் மடங்கள் எந்த அரசியல் கட்சிகளையும் சார்ந்தவைகள் அல்ல. ஜெகதீஷ் ஷெட்டர் மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்கள் பெரும்பாலானோர் லிங்காயத் மடாதிபதிகளிடம் ஆசி பெற்று செல்கிறார்கள் என்று ஒரு லிங்காயத் முக்கிய மடாதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: