முஷாரப்பை கடத்த தலிபான் தீவிரவாதிகள் திட்டம்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஏப்.27 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வெஸ் முஷாரப்பை கடத்த தலிபான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தி வருவதாக அந்த நாட்டு புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் முஷாரப். இவர் மீது நீதிபதிகளை பதவி நீக்கம், செய்தது,பதவியில் இருக்கும்போது அவசர சட்டம் பிரகடனப்படுத்தியது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை செய்யப்பட்டது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் இவருக்கு ஜாமீனை நீடிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனையொட்டி அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் முஷாரப்பை கடத்திச்செல்ல தலிபான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முஷாரப்பை விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்லும்போது அவர் கடத்தப்படலாம் என்றும் அவரை தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பினர் கடத்திச் செல்லலாம் என்றும் புலனாய்வு அமைப்பினர் எச்சரித்துள்ளனர். 

பாகிஸ்தானில் அடுத்தமாதம் 11-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் 4 தொகுதிகளில் போட்டியிட முஷாரப் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த 4 வேட்புமனுக்களையும் தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். இதை எதிர்த்து முஷாரப் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதன்மூலம் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதை ஷேர் செய்திடுங்கள்: