கற்பழிப்பு பெருக காரணம் என்ன? டெல்லி ஐகோர்ட்டு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.26 - தலைநகர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ள டெல்லி ஐகோர்ட்டு, இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை கண்டறியுமாறு டெல்லி நகர போலீசாருக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

தலைநகர் டெல்லி ஒரு கற்பழிப்பு நகரமாகவே மாறி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி ஓடும் பஸ்சில் ஒரு மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கயவர்களால் தாக்கப்பட்டு பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பிறகு சிகிச்சை பலனின்றி சிகிச்சை மருத்துவமனையில் உயிரிழந்தார். அதன் பிறகு சமீபத்தில் டெல்லி காந்தி நகர் பகுதியில் 5 வயது சிறுமி ஒருத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் வேறு சில மாநிலங்களிலும் கூட சிறுமிகள் கற்பழிப்பு தொடர் கதையாக நடந்து வருகிறது. 

இந்தநிலையில் கற்பழிப்பு சம்பவங்கள் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வருவதற்கு டெல்லி ஐகோர்ட்டு தனது கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்குமாறு டெல்லி நகர போலீசுக்கும் மத்திய அரசுக்கும் கோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி. முருகேசன் தலைமையிலான பெஞ்ச் இதுபற்றி கூறியதாவது:- 

தலைநகரில் டெல்லியில் என்ன நடக்கிறது என்பதை நினைக்கும்போது வியப்பாக உள்ளது. டெல்லியில் எதோ தவறு நடக்கிறது. மக்களுக்கு பைத்தியமே பிடித்துவிட்டதுபோலும். கற்பழிப்பு சம்பவங்கள் இப்படி திடிரென பெருக காரணம் என்ன. இதை டெல்லி போலீசாரும் உள்துறை விவகார அமைச்சகமும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த கொடுமையை ஒடுக்க காரணத்தை கண்டறிவது அவசியம். இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் பக்கத்து மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க காரணங்களையும் வழிமுறைகளையும் கண்டறிவது அவசியம். டெல்லியில் நடக்கின்ற சம்பவத்தால் எல்லோரும் சோகத்தில் இருக்கிறார்கள். 5 வயது சிறுமி கூட கற்பழிக்கப்படுகிறார். எனவே இதுபோன்ற குற்றங்களை எப்படி தடுப்பது என்பதை ஆராய வேண்டும். அதிகாரிகளுக்கு தரப்படும் பயிற்சி பற்றியும் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த பெஞ்ச் உத்தரவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: