முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க மாநாட்டிற்கு 16 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.30 - பா.ம.க மாநாட்டிற்கு 16 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது என்றும் எழுத்துப்பூர்வமாக அக்கட்சியினர் இவற்றை ஏற்றுக் கொண்டனர் என்று முதலமைச்சர் ஜெயலலிதா  சட்ட சபையில் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்த சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சியினர் தெரிவித்த கருத்துகளுக்கு நேற்று தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதாவின் பதிலுரையில் தெரிவித்ததாவது:-

25.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கும், மரக்காணம் காலனியை சேர்ந்தவர்களுக்கும் இடையே  நடைபெற்ற மோதல் குறித்து உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள்.  இது குறித்து விரிவான பதிலினை இந்த மாமன்றத்திற்கு நான் அளிக்க விரும்புகிறேன். 

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், 25.4.2013 அன்று, வன்னியர் சங்கம் அதாவது பாட்டாளி மக்கள் கட்சி, சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞ்ர் பெருவிழா

ஒன்றை நடத்த அறிவித்திருந்தது. இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளாக உறுப்பினர்கள் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தது.  இதில் பங்கேற்கும்படி வன்னியர் சங்கத்தின் சார்பாக, தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. வங்கக் கடலா, வன்னிய கடலா, ஒரு கோடி வன்னியர்கள் சித்திரை பெருவிழாவிற்கு அலைகடலென திரண்டு வாரீர் எனவும், கடல் நீரை அள்ள முடியாது, வன்னியரை வெல்ல முடியாது எனவும், நாங்க  உறைய விட்டு வாள் எடுத்தா இரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா எனவும், சோழர் வம்சம் இது சோறு போடும் வம்சம் இது, எதிரிகள் யாரும் வந்தால் கூறு போடும் வம்சம் இது எனவும் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. 

இவ்விழாவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை 16.4.2013 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அம்மனு மீது காவல் துறையினர் 19.4.2013 க்குள் விழா அமைப்பாளர்களுக்கு விளக்கம் கோரும் குறிப்பாணை ஒன்றை சார்வு செய்து, அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்தின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குவது குறித்துத் தீர்மானிக்குமாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தது. 

இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மேற்படி விழா அமைப்பாளர்களுக்கு இவ்விழா நடக்கும் போது இரு சமுதாயத்தினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும்; குறிப்பாக கடந்த 2000 மற்றும் 2010ம் ஆண்டு இவ்விழாவின் போது நடந்த கலவரத்தை சுட்டிக் காட்டியும்; இவ்விழாவிற்கு வந்த தொண்டர்கள் வாயிலாக விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும்; இவ்விழாவில் தலைவர்கள் பேசும் போது சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி இருந்ததையும்; அப்பேச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இரு சமுதாயத்தினர் இடையே மனக் கசப்பை ஏற்படுத்தியதையும்; இவ்விழா சம்பந்தமாக காவல் துறையினர் அளித்த நிபந்தனைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதையும்; கால அவகாசத்தை மீறி இவ்விழாவை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதையும்; இதற்கு முன்பு இவ்விழாக்களின் போது நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதையும்; விழாவின் போது அதிகப்படியான கூட்டத்தை கூட்டுவதற்கு போதிய முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாததையும்; ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேர கடும் வாகனப் போக்குவரத்து  நெரிசல் காரணமாக பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானதையும்; மேற்படி விழா நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கடற்கரை ஒழுங்கு முறைப் பகுதி என்பதால், அதற்குரிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறையினர் இடமிருந்து முன் அனுமதி பெறாததையும்; விழா நடக்கும் இடம், தொல்லியல் துறை பராமரித்து வரும் கடற்கரைக் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளதையும்; அத்துறையினர் இடமிருந்து அனுமதி பெறாததையும் விவரமாகக் குறிப்பிட்டு, விழாவிற்கு ஏன் அனுமதி மறுக்கக் கூடாது என கேட்டு இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு விழாவிற்கு அனுமதி கோரியிருந்த திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. 

இதற்கான பதில் கடிதம்,  திருக்கச்சூர் ஆறுமுகத்திடமிருந்து காஞ்சிபுரம் காவல் துறையினரால் 18.4.2013 அன்று பெறப்பட்டது. அக்கடிதத்தில், இவ்விழாவினால் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாது எனவும்;  ஜெ.குரு உள்ளிட்ட தலைவர்கள் எவரும் சட்டம் மற்றும் ஓழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், பிற சமூகத்தினர் இடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டார்கள் எனவும்; திட்டமிட்டபடி நிகழ்ச்சியைத் துவக்கி, காவல் துறையினர் குறிப்பிடும் நேரத்திற்கு முன்பாக எந்த விதமான கால தாமதமும் இன்றி நிகழ்ச்சி முடித்துக் கொள்ளப்படும் எனவும்; இந்த விழாவின் மூலம் எந்த விதமான சாதி பிரச்சனை மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விழாவில் கலந்து கொள்பவர்களால் ஏற்படாது எனவும்; விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும்; போக்குவரத்து பாதிக்காத வகையில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர அவசியக் காரியங்களுக்கு சென்று வர வழி அமைத்து தரப்படும் எனவும்; விழா நடத்தும் பகுதி முழுவதும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் சுத்தம் செய்து தரப்படும் எனவும்; காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும்; காவல் துறையினர் வழிகாட்டுதல்படி அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் விழா நடத்தப்படும் என்றும்  திருக்கச்சூர் ஆறுமுகம் அந்தக் கடிதத்தில் உறுதியளித்து இருந்தார்.  

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு சென்னையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட போது, அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும், அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு, இதனை காவல் துறையினர் பரிசீலித்தனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்திட அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன். 

14.4.2013 அன்று மக்கள் ஒற்றுமைப் பேரணி என்ற பெயரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை சென்னையில் கொண்டாடும் வகையில், எழும்பூரில் ஊர்வலம் மேற்கொள்ளவும், மற்றும் அன்றைய தினம் மாலை மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது. 

இந்த மனுவினை பரிசீலனை செய்த காவல் துறை, இந்தப் பேரணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்ததன் அடிப்படையில், இந்தப் பேரணியினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதன் அடிப்படையிலும், தர்மபுரி நத்தம் காலனியில் நடந்த சம்பவங்களை அடுத்து வட மாவட்டங்களில் சாதி ரீதியாக இருந்து வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தது. 

காவல் துறையின் மறுப்பினைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடுமாறு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊர்வலத்திற்கும் பொதுக் கூட்டத்திற்கும் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து காவல் துறையினர் செய்த மேல்முறையீட்டை 13.4.2013 அன்று நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, எந்த நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று நிர்ணயித்தும் உத்தரவிட்டது. 

இது போன்ற கூட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்படாத இனங்களில், சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுள்ள நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, வன்னியர் சங்கத்தினருக்கு 25.4.2013 அன்று மேற்படி விழா நடத்துவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது. 

1)விழாவின் போதோ அல்லது அதற்கு முந்தைய கூட்டங்களிலோ வன்முறையைத் தூண்டும் விதமாகவோ அல்லது பிற வகுப்பினர் மனம் புண்படும்படியாகவோ எவரும் பேசக் கூடாது.

2)விழாவின் போது வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்பவோ, வன்முறையை தூண்டும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவோ கூடாது.

3)மாநாட்டிற்கு வருபவர்கள் திறந்த வகை வாகனங்களை பயன்படுத்தக் கூடாது.

4)வாகனங்களின் மேல்கூரையின் மேல் அமர்ந்து வரக்கூடாது. வாகனங்களில் வருபவர்கள் வரும் வழிகளில் கோஷங்கள் எழுப்பக் கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கிகள், கட்டாயமாக பொருத்தி வரக் கூடாது.

5)பிரச்சினைக்குரிய பேச்சுகளை பேசும் பேச்சாளர்களை பேச அழைக்கக் கூடாது.

6)விழா நடக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடவசதிகள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் வரும் தொண்டர்களின் இதர வசதிகள் குறித்து விழா அமைப்பாளர்கள் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், விழா முடிந்தவுடன் அந்த இடம் சுற்றுப்புற சூழல் பாதிப்பின்றி சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

7)வாகனங்கள் நிறுத்துமிடங்களில் தகுந்த விளக்கு வசதிகள், தற்காலிக பாதுகாப்புத் தடைகள், ஒலிபெருக்கி வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

8)மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட புராதன சின்னங்களுக்கு சேதம் விளைவிக்கும் எந்த செயலையும் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யக் கூடாது.

9)விழா தொடர்பான  போர்டுகளை காவல் துறையினரின் அனுமதியுடன் பிரச்சனை இல்லாத இடங்களில் அமைத்து, கட்சி தொண்டர்களை நியமித்து அவற்றிற்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

10)விழா சம்பந்தமாக பிற மாவட்டங்களில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனமும் அதில் வரும் தொண்டர்கள் பற்றிய விவரங்களை ஒரு நாள் முன்பு, அதாவது 24.4.2013 அன்று  காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். 

11)ஒலி பெருக்கிகள் நிகழ்ச்சி நடத்தும் பகுதிகளில் மட்டுமே அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். பெட்டி வடிவ ஒலி பெருக்கியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

12)ஜோதி எடுத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வருவதற்கு அனுமதியில்லை. 

13)விழாவானது 25.4.2013 அன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அன்று இரவு பத்து மணிக்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும்.

14)பொது சொத்துக்களுக்கோ, இதர சொத்துக்களுக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால் விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள். அதற்குரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். இது தவிர சட்டப்படியாக எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைக்கும் கட்டுப்பட வேண்டும்.

15)சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினரால் அவ்வப்போது வழங்கப்படும் அனைத்து அறிவுரைகளையும் ஏற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். 

16)மேற்கூறிய நிபந்தனைகளை மீறினால் அதற்கு விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள்.

இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை  திருக்கச்சூர் ஆறுமுகம் 19.4.2013 அன்று ஒப்புதல் கையொப்பமிட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார். 

மேலும், 20.4.2013 அன்று, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இவ்விழா அமைப்பாளர்களை அழைத்து, ஒரு கூட்டம் நடத்தி, அதில் விழா எப்படி 

நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியையும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தினையும் அமைப்பாளர்களான திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் சிலரிடமிருந்து பெற்றுள்ளார்.  

மேலும், இச்சங்கத்தின் தலைவர்கள் காவல் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை கூடுதல் இயக்குநர் - சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆகியோரை நேரில் சந்தித்து காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடித்து விழாவின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தனர். 

காவல் துறையில் உள்ள சுமார் 90 ஆயிரம் காவலர்களை வைத்து எப்பொழுதும் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர முக்கிய பணிகளுக்கு உண்டான காவலர்கள் போக மீதமுள்ள காவலர்களை கொண்டு, ஒரே நேரத்தில் அடிக்கடி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சிரமமான காரியமாகும். 

கடந்த 25.4.2013 அன்று மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடைபெற்றது மட்டுமல்லாமல், மாநிலத்தில், திருவண்ணாமலையில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடிய நிகழ்ச்சிக்கும், மதுரையில் சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சிக்கும், சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கும், பெருமளவில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது.  

இருப்பினும், சித்திரை முழு நிலவு விழாவையொட்டி ஏற்படக்கூடிய சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மாமல்லபுரத்தில், 25.4.2013 அன்று, காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள், 99 காவல் உதவி ஆய்வாளர்கள், 935 இதர காவலநர்கள், 10 சிறப்பு காவல் படை நிறுமங்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள்  என மொத்தம் 1,910 பேர் விழா பாதுகாப்பு அலுவல்களை மேற்கொள்ளுதல், விழாவின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல்,  விழாவிற்கு வரும் வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.  

இத்துடன், இந்த விழாவிற்கு வரும் வாகனங்கள் வரும் சாலைகளிலும், பிரச்சனைக்குரிய பகுதிகளிலும், குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 2,724 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வந்தார். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பதிலுரையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்