முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்ச வழக்கில் எதுவும் வெளிவரப் போவதில்லை!

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      அரசியல்
Image Unavailable

 

சண்டிகர், மே. 13 - தான் ஒரு அப்பாவி என்றும் லஞ்ச வழக்கில் எதுவும் வெளிவரப் போவதில்லை என்றும் பதவி விலகிய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர் பவன்குமார் பன்சால். இவரது சகோதரி மகன் விஜய் சிங்லா. ரயில்வே துறையில் உயர் பதவி பெற்றுத் தருவதற்காக மகேஷ்குமார் என்பவரிடம் ரூ. 10 கோடி பேரம் பேசி அதில் ரூ. 90 லட்சத்தை லஞ்சமாக வாங்கிய போது சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டவர்தான் விஜய்சிங்லா. இப்படி தனது உறவினர் லஞ்சம் வாங்கியதற்காக சர்ச்சையில் சிக்கியவர்தான் ரயில்வே அமைச்சராக இருந்த பன்சால். 

இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பன்சாலும், நிலக்கரி ஊழல் தொடர்பாக அஸ்வினி குமாரும் பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தியதால் நாடாளுமன்றம் செயல்படாமலேயே முடங்கிப் போனது. குறிப்பாக, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2 வது கட்டம் சுத்தமாகவே முடங்கிப் போனது. 

இந்த நிலையில்தான் சமீபத்தில் சர்ச்சைக்கு ஆளான பவன்குமார் பன்சாலும், அஸ்வினி குமாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மத்திய அமைச்சர் கபில்சிபலுக்கு சட்டத் துறையும், சி.பி. ஜோஷிக்கு ரயில்வே துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் ஒரு அப்பாவி என்றும் லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் எதுவுமே வெளிவரப் போவதில்லை என்றும் பதவி விலகிய ரயில்வே அமைச்சர் பன்சால் கூறியுள்ளார். இது தொடர்பாக சண்டிகரில் உள்ள தனது தனியார் இல்லத்தில் கட்சி தொண்டர்களுடன் நடந்த கூட்டத்தில் பன்சால் கூறியதாவது, 

நான் ஒரு அப்பாவி. இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனவே எதுவும் வெளிவரப் போவதும் இல்லை. இந்த உறுதியை என்னால் தர முடியும். அதே நேரம் நான் அப்பாவி என்பதையும் உறுதியாக சொல்ல முடியும். திரும்பத் திரும்ப சொல்கிறேன். நான் ஒரு அப்பாவி. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை நான் வரவேற்கிறேன். ஆனால் எனக்கும் வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. சி.பி.ஐ. விசாரணையில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனால் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. அதே நேரம் எனக்கு இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். 

பிரதமரிடம் இவர் அளித்த ராஜினாமா கடிதத்திலும் இப்படித்தான் கூறியுள்ளாராம். விஜய் சிங்லாவிற்கும், மகேஷ்குமாருக்கும் உள்ள தொடர்பு பற்றி தனக்கு தெரியாது என்று பிரதமருக்கு அளித்த ராஜினாமா கடிதத்தில் பன்சால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பன்சாலிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. அவருக்கு சம்மன் அனுப்பவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்