முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தடா நீதிமன்றத்தில் சஞ்சய்தத் சரண்

வியாழக்கிழமை, 16 மே 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, மே. 17 - 1993 ல் நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் மும்பை தடா நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். இதனிடையே அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மும்பை ஆர்தர் சாலை சிறைக்கு வந்த மர்ம கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் 1993 ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளால் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களில் ஒரு 9 எம்.எம். ரக துப்பாக்கியையும், ஓரு ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் சஞ்சய்தத் சட்டவிரோதமாக வாங்கிய வழக்கில் மும்பை தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சஞ்சய்தத்துக்கு சுப்ரீம் கோர்ட் 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் தாம் சரணடைவதற்கு கால அவகாசம் கோரியிருந்தார்.

அதே நேரத்தில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும் மறு ஆய்வு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். ஆனால் மறு ஆய்வு மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் அவர் சரணடைய நேற்று முன்தினம் வரை கெடு விதித்தது.

இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தடா சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய்தத் சார்பில் அவரது வழக்கறிஞர் சுபாஷ் யாதவ் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தடா நீதிமன்றத்துக்கு பதில் புனே எரவாடா சிறையில் சஞ்சய் தத் சரணடைய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், சஞ்சய் தத் நேற்று தடா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதற்கிடையே, சஞ்சய்தத்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக மும்பை ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறை அதிகாரி வினோத் லோகன்டே கூறியுள்ளார். இருப்பினும் சரணடைந்துள்ள சஞ்சய்தத் முதலில் ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் எரவாடா சிறைக்கு மாற்றப்படுவார் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்