பிரதமர் மன்மோகன் சிங்குடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

வியாழக்கிழமை, 16 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.17  -  கர்நாடக முதலமைச்சர் சீத்தராமையா டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். அவருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சீத்தராமையா தெரிவித்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து  சீத்தராமையா முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். வேறு அமைச்சர்கள் எவரும் பதவியேற்கவில்லை. எனவே யார், யாரை அமைச்சர்களாக நியமிக்கலாம் என்று ஆலோசனை நடத்துவதற்காக  சீத்தராமையா டெல்லி சென்றார்.

அங்கு அவர் பிரதமரை சந்தித்தார். அப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்காக முதல்வர் சீத்தராமையாவுக்கு  பிரதமர் மன்மோகன்சிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். டெல்லியில் தங்கி இருக்கும் முதல்வர் சீத்தராமையா டெல்லியில் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பின்னர் சீத்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: 

       பிரதமர் மந்மோகன்சிங்கை நான் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். கர்நாடக மக்கள் தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர்களது எதிர்பார்ப்பை ஈடுகட்டும் வகையில் எனது அமைச்சரவை இருக்கும். இன்னும் சில நாள்களில் அமைச்சர்கள் பதவியேற்பார்கள். கர்நாடக சட்ட சபையில் காங்கிரஸ்  கட்சித் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்றார்.

கர்நாடகத்தில் இவர் முதல்வராவதை எதிர்த்து மல்லிகார்ஜூன கார்கே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆயினும் இவரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தில் இம்மாதம் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோத வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இங்கு ஆட்சியில் இருந்த பாஜக ஆட்சியை பறிகொடுத்தது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 223 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் வெற்றிபெற்றது. அதாவது 113 இடங்களே ஆட்சி அமைக்க தேவை என்ற நிலையில் 8 இடங்களை அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: