முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாந்திடம் சென்னையில் போலீசார் விடிய விடிய விசாரணை

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.22 - கிரிக்கெட் சூதாட்ட கும்பல்  தலைவன் பிரசாந்திடம் சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலும், கிரிக்கெட் சூதாட்டம் மூலம் 20-க்கும் மேற்பட்ட தரகர்கள் கோடிகளை குவித்துள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஹரிஸ் பஜாஜ், நர்பத், வேதாச்சலம், பப்பு கவுதம், தீபஜ் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 தரகர்கள் பிடிப்பட்டனர்.

இவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் ரொக்கப்பணம், லேப்டாப், கம்ப்யூட்டர்கள், வயர்லெஸ் போன்கள், செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூதாட்ட கும்பலுக்கு அயனாவரத்தை சேர்ந்த பிரசாந்த் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது.

போலீசார் தேடியதையடுத்து தலைமறைவாக இருந்த அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிரசாந்த் நேற்று முன்தினம் மாலையில் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் திடீரென சரண் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகை மற்றும் டி.வி. கேமரா மேன்கள் பிரசாந்தை படம் பிடிப்பதற்காக அங்கு படையெடுத்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் இதற்கு அனுமதிக்கவில்லை. இதன்பிறகு பிரசாந்திடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.

எத்தனை ஆண்டுகளாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள்? இதில் எத்தனை கோடிகளை சம்பாதித்துள்ளீர்கள்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கு பதில் அளித்து பிரசாந்த் கொடுத்துள்ள வாக்கு மூலம் வருமாறு:-

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதனை ஒரு தொழில் போலவே நான் செய்து வருகிறேன். பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தினந்தோறும் லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்தேன். குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைக்கும்.

இப்படி கோடிக்கணக்கான ரூபாயை சூதாட்டம் மூலமாக நான் சுருட்டியுள்ளேன். என்னைப் போல பலர் சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதுவே சூதாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியது. இவ்வாறு பிரசாந்த் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரசாந்த் தென்ஆப்பிரிக்காவில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக புனேயில் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

அவரை பிடிக்க உறவினர்கள் மற்றும் நண்பர்களையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருவியாக பயன்படுத்தினர். பிரசாந்தின் தம்பி ஒருவரை பிடித்து போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். இதுபற்றி தெரியவந்ததுமே, பிரசாந்த் தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வெளியில் வந்துள்ளார்.

தனது தம்பி மேல் வைத்திருந்த பாசமே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அவரை சரண் அடைய வைத்துள்ளது. அயனாவரத்தில் உள்ள பிரசாந்தின் பங்களா வீட்டில் சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பிக்கள் ராஜா சீனிவாசன், ஜெயச்சந்திரன், அரவிந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலையில் அதிரடி சோதனை நடத்தி பாஸ்போர்ட் மற்றும் லேப்-டாப்புகளை கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 தரகர்களில் ஹரிஸ் பஜாஜ், பப்பு, வேதாச்சலம், நர்பத் ஆகிய 4 பேரை 10 நாட்கள் காவலில் எடுக்க போலீஸ் சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (22-ந் தேதி) நடக்கிறது. அப்போது 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்