அத்வானி ராஜினாமா: சரத்யாதவ் கருத்து

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 12  - பாரதிய ஜனதா கட்சியில் தாம் வகித்த பதவிகளை மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா செய்து விட்டதால் இனி தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதே இல்லை என்று அதன் ஒருங்கிணைப்பாளரும் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான சரத் யாதவ் அறிவித்துள்ளார். 

பாரதிய ஜனதாவின் லோக்சபா தேர்தலுக்கான தேசிய பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூத்த பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி தமது கட்சிப் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது பாரதிய ஜனதாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ, அத்வானியே ராஜினாமா செய்துவிட்ட பிறகு அப்படி ஒரு கூட்டணியே இல்லை என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரத் யாதவ் கூறுகையில், 

அத்வானியின் ராஜினாமா எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியவர்கள் வாஜ்பாயும் அத்வானியும்தான். அவர்களுடன் இணைந்து ராமகிருஷ்ண ஹெக்டே குறைந்த பட்ச பொதுசெயல் திட்டத்தை உருவாக்கினார். எங்களைப் பொறுத்தவரை அத்வானி ராஜினாமா செய்துவிட்ட நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறுவது பற்றி நாங்கள் மறுபரிசீலனை செய்கிறோம். அத்வானி ஒரு மூத்த தலைவர். இந்த நாட்டையும் நாட்டின் அரசியலையும் நன்கு புரிந்து கொண்டவர். அவர் கட்சிப் பதவிகளில் இருந்து விலகி அக்கட்சியின் முடிவெடுக்கக் கூடிய பொறுப்பில் இல்லையென்கிற போது நாங்கள் எங்களது நிலைமையை மறுபரிசீலனை செய்வோம். இந்த வார இறுதியில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் எங்களது முடிவு தீர்மானிக்கப்படும். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பலரும் சொந்த நலனுக்காக செயல்படுவதாக அத்வானி தமது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பற்றி பா.ஜ.க. வினர் சிந்திக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில் அத்வானி வெளியேறிவிட்ட பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது இல்லை என்றார் அவர்

இதை ஷேர் செய்திடுங்கள்: