முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் கூட்டணி: எடியூரப்பா கட்சி முடிவு

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

பெங்களூர், ஜூன். 21 - வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தயார் என எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கர்நாடக பா.ஜ.க.வில் இருந்து விலகி தனி கட்சி தொடங்கிய அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றார். நிலக்கரி சுரங்க ஊழலில் பதவியை இழந்த எடியூரப்பாவுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியின் நெருக்கடி காரணமாகவே மீண்டும் முதல்வர் பதவி கிடைக்காமல் போனது. இதன் காரணமாகத்தான் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலக நேரிட்டது. 

அண்மையில் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க.வில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டது. பா.ஜ.க.வில் அத்வானியின் செல்வாக்கு குறைந்து மோடியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதை தொடர்ந்து  எடியூரப்பா மீண்டும் பா.ஜ.கவில் இணைவார் என்று யூகங்கள் வெளியாகி உள்ளது. இதனை எடியூரப்பா மறுத்தார். இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தயார் என கர்நாடக ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தனஞ்செய் குமார் பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அதே சமயம் கர்நாடக ஜனதாவை பா.ஜ.க.வுடன் இணைக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி குறித்து பா.ஜ.க மேலிடம்தான் முடிவு செய்யும். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக எடியூரப்பாவிடம் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை என்று கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்