முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய நண்பர்கள் யார் என்பதை பா.ஜ.க அறிவிக்க கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன். 26 - வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டுமானால் தேசிய அளவில் புதிய நண்பர்கள் யார் என்பதை பா.ஜ.க அறிவிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அக்கட்சியின் இதழான சாம்னாவில் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது, 

மரம் வளர்வது போல நண்பர்கள் வளர மாட்டார்கள். அவர்களை பேணி பாதுகாக்க வேண்டும். இதுவரை மலர்களையும், பழங்களையும் நிழலையும் கொடுத்து வந்த ஒரு மரத்தின் கிளையை வெட்டி விட்டால் புதிய நண்பர்கள் எவ்வாறு கிடைப்பார்கள். 

ஒரு காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுமார் 30 கட்சிகள் இருந்தன. இது படிப்படியாக குறைந்து வருகிறது. சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதை அடுத்து இந்த கூட்டணியில் பா.ஜ.க, சிவசேனா, சிரோமணி அகாலிதளம் ஆகிய 3 கட்சிகள் மட்டுமே உள்ளன. முன்பு பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி இல்லத்தில் கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றால் அரங்கு நிறைந்திருக்கும். இப்போது ஒரு மேஜையும், 4 நாற்காலிகளும் இருந்தால் போதும் என்ற நிலை உள்ளது. 

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் விலகியதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவியை எனக்கு வழங்க போவதாக கூறப்படுகிறது. 2 கட்சிகளை தேநீர் விருந்துக்கு கூப்பிடுவதை தவிர இந்த பதவியால் என்ன செய்ய முடியும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க பா.ஜ.க கூட்டணியால் முடியுமா? முடியாது என்றால் தேசிய அளவில் புதிய நண்பர்களை அறிவிக்க வேண்டும். 

மகராஷ்டிரா மாநிலத்தில் இந்துத்வா அடிப்படையில் சிவசேனா கட்சி பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் கூட்டணிக்கு யார் தயாராக இருக்கிறார்கள்? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கும் மீண்டும் கூட்டணியில் இணைவார்களா? கர்நாடகத்தில் எடியூரப்பாவும், ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியும் சேர்வார்களா? மேற்கண்ட கேள்விகளுக்கு எல்லாம் உரிய நேரத்தில் பதில் கிடைத்தால்தான் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போதுதான் வரும் மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டுமானால் பா.ஜ.க. கூட்டணியில் புதிய நண்பர்களை சேர்க்க வேண்டியது அவசியம் என்று அத்வானி சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்