முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகளுக்கு மடிக்கணிணிகள்: நிதி அமைச்சர் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

தேனி, ஜூலை. 1  - தேனி மாவட்டம், கோட்டூர், அரசு தொழில் நுட்ப கல்லூரியில் 238 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விலையில்லா மடிக்கணினிகளையும், பள்ளிசிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் பார்வை குறைபாடுகள் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா கண்ணாடிகளையும்  வழங்கினார். 

தேனி மாவட்டம் கோட்டூர் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணிகளை வழங்கி தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,   

தமிழக முதல்வர் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்ற உலக தரம் வாய்ந்த கல்வியினை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பொருட்டு மாநிலத்தின் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பகுதி நிதியினை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆண்டு காலங்களில் 4 பொறியியல் கல்லூரிகளையும், 36 கலை மற்றும அறிவியல் கல்லூரிகளையும், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 2 கால்நடை மருத்துவக் கல்லூரி உட்பட மொத்தம் 54 கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் கல்விப்புரட்சியை தமிழக முதல்வர் நிகழ்த்தி உள்ளார். 

அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் போடி நாயக்கனூரில் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான கட்டுமானப்பணி ரூ. 95 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. அக் கல்லூரியின் புதிய கட்டிடத்தினை தமிழக முதல்வர் மிக விரைவில் அவர்களது திருக்கரங்களால் திறக்க உள்ளார். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கல்வி என்பது மிக மிக அவசியமாகும் என கருதி உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக், கலை-அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகளையும் முதல்வர் வழங்கி வருகிறார்.

பள்ளி குழந்தைகளிடையே காணப்படும் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை போன்ற குறைபாடுகளினால் அவர்களுடைய கல்விதிறன் மற்றும் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிசிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் விலையில்லா கண்ணாடிகளையும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் சமச்சீரான மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழக முதல்வர் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். 

தொலை நோக்கு பார்வையுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு திட்டங்களும் சீரிய சிந்தனையுடன திட்டமிடப்பட்டு அதனை நிறைவேற்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டு வருவாய் தொகையான ரூ. 86ஆயிரம் கோடியில் ஏழை எளியோர்களின் சமூக பொருளாதாரத்தை முன்னேற்றுவற்காக ரூ. 43ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கி சாதனை படைத்துள்ளார். எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் தமிழக அரசு வழங்க கூடிய அனைத்து விதமான உதவியினையும் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.மாகலிங்கம், நகர்மன்றத் தலைவர்கள் சிவக்குமார், முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் செல்லமுத்து, தீபாவளிராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் என்.ஆண்டி, தேனி மாவட்ட கோகோ விளையாட்டு கழகத் தலைவர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், தேனி ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ரமேஷ்பாபு, ஒன்றியகுழு உறுப்பினர் எஸ்.கே.வி. ரமணி, கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் பி.டி. முத்துவேல்,  தனித் துணை  ஆட்சியர்  சிறப்புத்திட்டங்கள் (பொ) அஜினாபாத்திமா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. காஞ்சனா, கோட்டூர் அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் (பொ). கே.சுதர்சன், தேனி வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கலை செல்வராஜன், நாகரத்தினம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்