ஸ்டிரைக்கில் ஈடுபட்ட விமானிகளுக்கு சம்பளம் இல்லை

புதன்கிழமை, 4 மே 2011      இந்தியா
Vayalar Ravi

 

புதுடெல்லி,மே.4 - வேலைக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நாட்களில் விமானிகளுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் ஸ்டிரைக்கை கைவிட்டால்தான் விமானிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் வயலார் ரவி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

செலவை குறைப்பதற்காக இந்தியன் ஏர் லைன்ஸ் விமான போக்குவரத்து கம்பெனியுடன் ஏர் இந்தியா விமான கம்பெனி இணைக்கப்பட்டது. ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி ஏர் இந்தியா விமான கம்பெனி ஊழியர்கள் நேற்று 7-வது நாட்களாக ஸ்டிரைக் செய்து வருகின்றனர். இதனால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது கோடைகாலமாக இருப்பதால் பயணிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் காத்தியிருக்கின்றனர். ஸ்டிரைக்கை முடித்துக்கொள்ளும்படி விமானிகளுக்கு சுப்ரீம்கோர்ட்டும் அறிவுறுத்தியுள்ளது. அப்படி இருந்தும் விமானிகள் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கவில்லை. 

இந்தநிலையில் ஸ்டிரைக் செய்யும் விமானிகளுக்கு ஸ்டிரைக் நடந்த விமானிகளுக்கு சம்பளம் இல்லை என்றும் அவர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றால்தான் விமானிகளின் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவது என்றும் மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டிரைக் செய்து வரும் விமானிகள் மற்றும் ஏர் இந்திய விமான கம்பெனியின் பிடிவாத போக்கிற்கு டெல்லி ஐகோர்ட்டும் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை போக்க உடனடியாக நடுவராக இருந்து செயல்பட ஒரு வழக்கறிஞரையும் டெல்லி ஐகோர்ட்டு நியமித்துள்ளது. இருதரப்பினருக்கும் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர விருப்பம் இல்லை என்று ஏர் இந்தியா சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி பி.டி. அகமத் கோபமாக கூறினார். 

விமானிகள் ஸ்டிரைக்கால் நேற்று முடிய ரூ. 40 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு பயணிகள் தவித்துக்கொண்டியிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: