என்எல்சி பங்கு: முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் கடிதம்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.13 - என்எல்சி  பங்கு விற்பனை தொடர்பாக செபியுடன் பேச்சு நடத்த தமிழகத்தில் இருந்து ஒரு மூத்த அதிகாரியை அனுப்பி வைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவிற்கு எழுதி உள்ள பதில் கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்எல்சி ஊழியர்களும் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்திலும் அவர்கள் குதிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் என்எல்சி 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா யோசனை தெரிவித்திருந்தார். இதுபற்றி கடந்த வாரம் பேட்டியளித்த  நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

   இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் 5 சதவீத பங்குகளை விற்பது தனியார் மயமாகாது என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த யோசனை பற்றி செபியுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விசயம் குறித்து ஆகஸ்ட்8க்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் செபியுடனும், பங்கு விற்பனை துறையுடனும் பேச்சு நடத்த தமிழக அரசு ஒரு மூத்த அதிகாரியை அனுப்ப வேண்டும்.அப்போதுதான் அதற்கு இறுதி வடிவம் கொடுக்க முடியும். எனவே ஒரு மூத்த அதிகாரியை பங்கு விற்பனை குறித்து பேச உடனே அனுப்புங்கள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். என்எல்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேணடும்.அப்போதுதான் மின்தட்டுப்பாடு ஏற்படாது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: