மேற்கவங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: 6 பேர் பலி

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,ஜூலை.23 - மேற்குவங்க மாநிலத்தில் நேற்று 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது வன்முறை சம்பவங்கள் வெடித்ததில் நேற்று மதியத்திற்குள்ளேயே 6 பேர் வரை பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. மேற்குவங்க மாநிலத்தில் 5 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த மேற்கு மிதனப்பூர், புர்லியா, பங்குரா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. ஆனால் வியக்கத்தக்க வகையில் முதல் கட்ட தேர்தலின்போது உயிரிழப்பு ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடந்தது. ஆனால் இரண்டாவது, மூன்றாவது கட்ட தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் வெடித்தன. கடந்த 15-ம் தேதி இரண்டாவது கட்ட தேர்தல் நடந்தபோது 3 பேர் கொல்லப்பட்டனர். பிறகு 19-ம் தேதி 3-ம் கட்ட தேர்தல் நடந்தபோது 5 பேர் கொல்லப்பட்டார்கள். நேற்று மிக முக்கியமான 4-வது கட்ட தேர்தல் நடந்தபோதும் வன்முறை சம்பவங்கள் வெடித்ததில் மதியத்திற்குள் 6 பேர் வரை பலியாகிவிட்டனர். ரத்தக்களரிக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த திங்கள் அன்று பெல்டங்கா என்ற இடத்தில் வெடிகுண்டு தாக்குதலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பலியானார் மற்றொருவர் முர்ஜிதாபாத்தில் ராணி நகரில் கொல்லப்பட்டார். அவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 தொண்டர்கள் உடல்கள் கடந்த திங்கள் அன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 3 பேரை காணவில்லை. இந்தநிலையில் இம்மாநிலத்தில் 5-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல் வரும் 25-ம் தேதி நடக்கிறது. வாக்குகள் 29-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தத்தில் இம்மாநிலத்தில் நடந்த இந்த தேர்தலால் மேற்குவங்க மாநிலமே வன்முறை சம்பவத்தால் கதிகலங்கிப்போய் இருக்கிறது என்பதே உண்மையாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்: