கார் ஏற்றிக்கொன்ற வழக்கு: சல்மான்கான் மீது குற்றச்சாட்டு

புதன்கிழமை, 24 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை. 25 - 2002 ம் ஆண்டில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2002 ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கானின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் ஏறியது. இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர். சல்மான் கான் குடிபோதையில் மரணம் ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டியதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து சல்மான் மீதான வழக்கை மறுவிசாரணை செய்ய மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சல்மான் கான் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கான் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. அவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சல்மான் கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிக்கு இடமாற்றம் கிடைத்துள்ளதால் வழக்கு வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சல்மான் கான் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால் சம்மன் அனுப்பும் போது மட்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: