முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரள அரசுக்கு கண்டனம்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.26  - முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தன்னிச்சையாக சட்டம் இயற்றுவது நாட்டின் சட்ட விதிகளை கடுமையாக பாதிக்கும் என்று சுப்ரீம்கோர்ட்டு எச்சரித்துள்ளது. தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இந்தநிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தாமல் அதற்கு எதிராக செயல்பட்டதோடு புதிய சட்டம் ஒன்றையும் கேரளா இயற்றியது. முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் எனவே புதிய அணை கட்டியே தீருவோம் என்றும் அம்மாநில சட்டசபையில் புதிய சட்டத்தை கொண்டுவந்தது கேரளா. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து அணையின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்வதற்காக சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் தொழில்நுட்ப அளவிலும் மற்றும் எல்லை வகையிலும் முல்லைப்பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 9-ம் தேதி விசாரணை நடந்தது. அப்போது இறுதி விசாரணை ஜூலை மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி முல்லைப்பெரியாறு அணை தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை கடந்த 3 நாட்களாகவே நடந்தது. நேற்று தமிழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டே 142 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு அறிவித்த பிறகும் கேரளா சட்டம் இயற்றுவது சிறிதும் நியாயம் இல்லை என்று வாதிட்டார். இந்த அணையை 100 ஆண்டுகளாகவே தமிழகம்தான் பராமரித்து வருகிறது. எனவே நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோருவதற்கு தமிழகத்திற்கு உரிமை உண்டு என்று வாதிட்டார். மேலும் கேரளம் புதிய அணை கட்டுவதை ஏற்க முடியாது என்றும் தமிழக வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.எம். லோதா, இப்படி அவரவர் வசதிக்கு சட்டம் இயற்றினால் நாட்டின் சட்ட விதிகளை அது கடுமையாக பாதிக்கும் என்று வேதனையோடு எச்சரித்தார். தொடர்ந்து வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: