சொத்துக் குவிப்பு வழக்கு: சோனியா உதவியாளருக்கு சம்மன்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 26 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் வின்சென்ட் ஜார்ஜை சொத்துக்குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வின்சென்ட் ஜார்ஜ் கடந்த 1984 ம் ஆண்டு நவம்பர் முதல் 1990 டிசம்பர் வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்களை குவித்ததாக 2010 ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த ராஜீவ் காந்தியின் தனி செயலர் என்ற பதவியை வகித்த ஜார்ஜ் தனது மனைவி, குழந்தை மற்றும் நெருங்கிய உறவினர்களின் பெயரில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்களை வாங்கியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டது. 

தெற்கு டெல்லி, பெங்களூர், சென்னை, கேரளம் உள்ளிட்ட இடங்களில் ஜார்ஜ் சொத்துக்களை வாங்கி குவித்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியிருந்தது. எனினும் சி.பி.ஐ. இந்த ஆண்டு மே மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ஜார்ஜ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி இவ்வழக்கை முடித்துக் கொள்ள அனுமதி தருமாறு கோரியிருந்தது. சி.பி.ஐ.யின் இந்த மனு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ். மாலிக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை முடித்துக் கொள்ள சி.பி.ஐ. சமர்ப்பித்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 30 ம் தேதி ஆஜராகுமாறு ஜார்ஜூக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: