முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் கனிமொழி ஆஜர்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மே.7 - ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆஜரானார். அப்போது முன் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தார். மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது விதிமுறைகளை மீறி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பாராளுமன்ற பொதுகணக்குக்குழுவும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தியது. அதன் வரைவு அறிக்கை பாராளுமன்ற லோக்சபை சபாநாயகர் மீராகுமாரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதைத்தவிர பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தியது. 

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு கண்காணித்ததோடு மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்தது. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவின்படி விசாரணையை தீவிரப்படுத்திய சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் குற்றப்பத்திரிகையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச்செயலாளர் சந்தோலியா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெஹூரா சித்தார்த்தா, ஸ்வான் நிறுவன புரமோட்டர் பால்வா ஆகியோர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 25-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்ததது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், 3-வது மனைவி ராஜாத்தி அம்மாளின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி, உள்பட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் இன்று மே-6-ம் தேதி) டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி ஆஜராகுவதற்கு நேற்றுமுன்தினமே கனிமொழி டெல்லி சென்றுவிட்டார். கனிமொழி டெல்லிக்கு செல்லும் முன்பு, தமிழக அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி. உள்பட தி.மு.க.வை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று கனிமொழியை காப்பாற்றுவதற்கு சட்ட நிபுணர்கள்,முன்னாள் நீதிபதிகள் ஆகியோர்களை சந்தித்து பேசியதாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் டெல்லிக்கு சென்ற கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றார்.

டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.தனிக்கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவருக்கு வாதாட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில் கனிமொழி ஒரு அப்பாவி என்றும் அவருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். கலைஞர் டி.வி.யின் பங்குதாரராக மட்டுமே கனிமொழி இருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளாக அவர் இருப்பதால்தான் கனிமொழி குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் ராம்ஜெத்மலானி மேலும் கூறினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக கனிமொழி சென்றபோது அவருடன் தி.மு.க. வை சேர்ந்த 5 எம்.பி.க்கள் சென்றனர். 

சி.பி.ஐ.தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச்சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மேலும் கலைஞர் டி.வி. செயல்பாட்டில் ஒரு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீதம் பங்கும், அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்கும் முதல்வர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்கும் உள்ளது. 2 ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி சென்றிருக்கிறது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது. அதாவது டி.பி.ரியாலிட்டி கம்பெனியில் இருந்து குசேகான் ப்ரூட்ஸ் அண்ட் வெஜிடேபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், டிபி கம்பெனி, சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் மூலம் இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு போய் சேர்ந்துள்ளது. ஸ்வான் தகவல்தொடர்பு பிரைவேட் லிமிடெட்டுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை செய்ததற்காக இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் 2ஜிஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதனால்தான் நேற்று சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜரானபோது முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கலும் செய்தார். 

 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது கனிமொழி, சரத்குமார் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி, இந்த வழக்கில் கனிமொழிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த ஊழலுக்கு முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குத்தான் உண்டு என்றும் ராம்ஜேத்மலானி வாதிட்டார். ஆ.ராசாவும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஷைனி, இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு(இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார். எனவே இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் இதே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago