முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி விவகாரம்: 26ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 16 - விதிகளை மீறி 2 ஜி அலைக்கற்றை உரிமங்களை கூடுதலாக பெற்றதாக பாரதி செல்லுலார் தலைவர் சுனில் மித்தல் எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர் ரவி ரூயா ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை வரும் 26 ம் தேதிக்கு ஒத்து வைக்கப்பட்டது. இந்த வழக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுனில் மித்தல், ரவி ரூயா, மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் ஷியாமல் கோஷ் ஆகியோர் ஆஜராகினர். ரூயா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சால்வே, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று கோரும் மனு மீது சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கும் வரை வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

அதையடுத்து நீதிபதி சைனி, எனக்கு தெரிந்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கை சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் எந்த தடையும் விதிக்கவில்லை. இருப்பினும் இந்த விஷயத்தில் சுனில் மித்தலும், ரவி ரூயாவும் சுப்ரீம் கோர்ட்டிடம் தெளிவான விளக்கத்தை பெற்று அடுத்த விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார். 

2001 - 02 ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது மத்திய தொலை தொடர்பு அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் பாரதி செல்லுலார், ஹட்சிசன் மேக்ஸ் டெலிகாம், ஸ்டெர்லிங் செல்லுலார், வோடபோன் மொபைல் சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் விதிகளை மீறி கூடுதலாக அலைக்கற்றை உரிமங்கள் பெற்றதாக சி.பி.ஐ. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

பிரமோத் மகாஜன் இறந்து விட்டதால் அவரது பெயர் நீங்கலாக ஷியாமல் கோஷ் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் மூன்று நிறுவனங்களின் தலைமை பொறுப்பை வகிக்கும் சுனில் மித்தல், ரவி ரூயா ஆகியோர் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. 

இந்நிலையில் சம்மனை ரத்து செய்ய கோரி சுனில் மித்தல், ரவி ரூயா இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இருவரும் நேரில் ஆஜராக தேவையில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் கூறியது. அதன் பிறகு மனு மீது உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்நிலையில் தங்கள் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் வரை சி.பி.ஐ. நீதிமன்றம் தங்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க கூடாது என்று சுனில் மித்தல், ரவி ரூயா இருவரும் கோரி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்