முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா?

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.19 - நடப்பு ராஜ்யசபை கூட்டத்தில் ஊழலை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள லோக்பால் மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய ஊழியர் நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

நாட்டில் மலிந்துவிட்ட ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை கொண்டுவர பிரபல காந்தீயவாதி அண்ணா ஹசாரே உண்ணாவிரதப்போராட்டம் இருந்தார். இதனையொட்டி லோக்பால் மசோதாவை கொண்டுவர மத்திய அரசு சம்மதித்தது. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி லோக்சபையில் இந்த மசோதா நிறைவேறியது. ஆனால் ராஜ்யசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பின்னர் நிறைவேற இருந்தது. ஆனால் அப்போது ராஜ்யசபையில் கூட்டம் முழுவதும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்ததால் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. 

இதற்கிடையில் லோக்பால் மசோதாவை நடப்பு ராஜ்யசபை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் நோட்டீசு கொடுத்துள்ளேன் என்று மத்திய ஊழியர் நலத்துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். லோக்பால் மசோதா நடப்பு ராஜ்யசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட மத்திய அரசு விரும்புகிறது. அதனால் இந்த கூட்டத்தொடரில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாம். கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி லோக்பால் மற்றும் லோகாயுக்தா மசோதா லோக்சபையில் நிறைவேறியது. அதன் பின்னர் இந்த மசோதா ராஜ்யசபை தேர்வு கமிட்டியின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகளிடையே கருத்து வேறுபாடு இருந்ததால் கடந்தாண்டு மே மாதம் ராஜ்யசபை தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டியின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது என்று நராயாணசாமி கூறினார். இந்த கமிட்டியின் ஆய்வு அறிக்கை கடந்தாண்டு மே மாதம் ராஜ்யசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. கமிட்டியின் சிபாரிசு ஏற்றுக்கொண்டு கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி திருத்தங்களை மத்திய கேபினட் ஏற்றுக்கொண்டது. அதன்படி மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என்பது கைவிடப்பட்டது. இதனையொட்டி நடப்பு ராஜ்யசபை கூட்டத்தில் இந்த மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வழிபிறந்துள்ளது என்றும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். ராஜ்யசபையில் இந்த மசோதா நிறைவேறியதும் மீண்டும் லோக்சபைக்கு அனுப்பப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த மசோதாவில் ஊழல் புரியும் நிறுவனங்கள், தனிநபர்களை விசாரிக்க மத்திய அரசு லோக்பால் அமைப்பையும் மாநிலங்கள் லோகாயுக்தாவும் அமைக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவானது அரசியலில் ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் நடவடிக்கை என்று கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்